ரூ.450 கோடி போலி ரசீதுகள் அளித்து மோசடி செய்ததாக ஈரோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத் தலைவரை ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஈரோட்டில் அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அரசு ஒப்பந்தப் பணிகளையும், உள்கட்டமைப்பு பணிகளான கட்டுமானம், வடிகால், சாலை அமைப்பு உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறது. இந்த நிறுவனம் ஒப்பந்தப் பணிகளை முடிக்காமலே முடித்ததாகவும், பொருட்களை வாங்கியதாகவும் போலி ரசீதுகளைக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.
நேற்று முன்தினம் (அக்டோபர் 16), விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜிஎஸ்டி இயக்குநரக ஜெனரல் அலுவலக அதிகாரிகள் ஈரோட்டில் உள்ள இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர். ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் மேற்கொண்ட சோதனையில் போலி ரசீதுகள் சிக்கியிருக்கிறது. அதன்மூலம் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை மட்டும் சுமார் 450 கோடி ரூபாய் மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்த நிறுவனம் ஜிஎஸ்டி வரியிலும் மோசடி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. கடந்த சில காலங்களில் நடைபெற்ற மிகப்பெரிய ஜிஎஸ்டி மோசடி இது என்று விசாகப்பட்டின ஜிஎஸ்டி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து, இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அசோக் குமாரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கடந்த 16ஆம் தேதி கைது செய்து விசாரித்துள்ளனர். வரும் 30ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.�,