இந்தியாவில் 42,000 கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!

Published On:

| By admin

இந்தியாவில் இன்று போதை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு இன்று 42,000 கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இன்று நாடு முழுவதும் போதை ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு நாடு முழுவதும் 14 இடங்களில் 42,000 கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்படுகிறது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தப் போதைப்பொருட்கள் அழிப்பு நடவடிக்கை, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் ‘அசாதி கா அம்ரித் மஹோட்சவ்’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நாளை (இன்று) போதை அழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த போதை அழிப்பு நடவடிக்கை, அசாமின் கவுகாத்தி, உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, மகாராஷ்டிரத்தின் மும்பை உள்ளிட்ட பெருநகரங்களிலும்,

முந்த்ரா, பாட்னா சிலிகுரி உள்ளிட்ட 14 இடங்களில் 42,000 கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் போதை அழிப்பு நடவடிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக பார்வையிடுகிறார்.

இதைத்தொடர்ந்து பின்னர் அதிகாரிகளிடம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share