நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1-8 வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 9-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனின் தொடர்ச்சியாக வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் 1-8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பள்ளிகள் திறப்பு குறித்து இன்று(அக்டோபர் 25) செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ”கட்டாயமாக நவம்பர் 1ஆம் தேதி 1-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். மூன்றாம் அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு ஏதும் வெளியிடாததால் பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்பதில்லை. தீபாவளி முடிந்தபிறகு கூட வரலாம் என்று கூறினார்.
இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி பேருந்துகளில் பயணிக்கலாம். அவ்வாறு பழைய பஸ் பாஸ் இல்லாத மாணவர்கள் தங்களது பள்ளி சீருடை மற்றும் அடையாள அட்டையை காட்டி பயணிக்கலாம். என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. புதிய பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அடையாள அட்டையைக் காட்டி இலவசமாக பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,