தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் அரசு போக்குவரத்து கழகங்களில் ஏசி பஸ்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பஸ் போக்குவரத்து கடந்த (2020) ஆண்டு மார்ச் மாதம் முதல் முடக்கப்பட்டது. அதன் பிறகு ஊரடங்கு தளர்வை தொடர்ந்து பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் குளிர்சாதன வசதி கொண்ட ஏசி பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த (பிப்ரவரி) மாதம் முதல் அரசு ஏசி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கோடைக்காலம் நெருங்க உள்ள நிலையில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு போக்குவரத்து கழகங்களில் ஏசி பஸ்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள், “தமிழக அரசின் அனுமதியைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் ஏசி பஸ்களை இயக்கி வருகிறோம். அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 700 ஏசி பஸ்கள் உள்ளன. கடந்த மாதம் வரை 40 சதவிகிதம், அதாவது 280 ஏசி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஏசி பஸ்களில் பயணம் செய்ய பொதுமக்கள் விரும்புகின்றனர். எனவே கூடுதலாக 120 ஏசி பஸ்களை இயக்கி வருகிறோம். மொத்தம் ஏசி பஸ்களின் சேவை 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக ஏசி பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.
**-ராஜ்**
�,