நெருங்கும் தேர்தல்: லட்சக்கணக்கில் பணம், பொருட்கள் பறிமுதல்!

Published On:

| By Balaji

கடலூர் மாவட்டம் வேப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பணம் கொண்டு செல்வதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதை கண்காணிக்கும் வகையில், பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருத்தாசலம் வேப்பூர் அருகே இன்று தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் கணேசன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த காரினை சோதனையிட்டதில், ரூ.25 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்திய விசாரணையில், சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த சசிகுமார் , தான் ஒரு வெள்ளி வியாபாரி என்றும், கொலுசு, குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, மோதிரம், தட்டு உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக கும்பகோணம் எடுத்துச்செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான எந்தவொரு ஆவணமும் இல்லாததால் பறக்கும் படையினர் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

**நீலகிரி**

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே மக்களுக்கு வழங்கவிருந்த 4,500 கோழிக்குஞ்சுகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காகதான், கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்பட்டன. இதில் தேர்தல் விதிமீறல்கள் இல்லை என கால்நடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

**புதுக்கோட்டை**

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டுமாவடி சோதனைச்சாவடியில் பறக்கும் படை அலுவலர் முத்துகுமார் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டத்தில் உரிய ஆவணங்களின்றி 1 லட்சத்து 22 ஆயிரம் பணம் எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

**கரூர்**

கரூர் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே அலுவலர் சரஸ்வதி தலைமையில் இன்று நடந்த வாகன சோதனையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாட்டின்கராவை சேர்ந்த சாஜு என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2 ,92,500ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

**கிருஷ்ணராயபுரம்**

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உட்பட்ட ஜெகதாபி அருகே அய்யம்பாளையத்தில் அலுவலர் மணிமேகலை தலைமையில் சோதனை நடைபெற்றது. அந்த வழியாக வந்த மினி வேனை சோதனையிட்டதில் ரூ.82 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேனில் இருந்தவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த புல்லான்விடுதியைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் பேராவூரணியைச் சேர்ந்த அப்துல்மஜீத் என்பது தெரிய வந்தது.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share