சுஜித்…சஞ்சனா…ருத்ரன்…பவழவேணி…: தொடரும் சோகங்கள்!

Published On:

| By Balaji

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி நடுக்காட்டுப்பட்டியில் உள்ள தனது இல்லத்தின் வெளியே துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுஜித் எதிர்பாராத விதமாக ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். 4 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு அவரது உடல் மட்டும் மீட்கப்பட்டது.

கடந்த 28ஆம் தேதி, சுஜித்தை மீட்கும் பணி தொடர்பான செய்தியைப் பார்த்துக் கொண்டு டிவியில் மூழ்கியுள்ளனர் தூத்துக்குடியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் நிஷா தம்பதியினர். இதனால் தங்களது இரண்டு வயதுக் குழந்தை ரேவதி காஞ்சனாவைக் கவனிக்காமல் விட்டுள்ளனர், அக்குழந்தை கழிவறையிலிருந்த தொட்டியில் தண்ணீர் எடுக்க முயன்று அதில் தவறி விழுந்து உயிரிழந்தது.

இந்நிலையில் அடுத்தடுத்த சோக சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கப்பூரைச் சேர்ந்த தம்பதியினர் மகாராஜன்- பிரியா. இவர்களது 3 வயதுக் குழந்தை பவழவேணி. தீபாவளியை முன்னிட்டு பண்ருட்டி பண்ரக்கோட்டையில் உள்ள தாய் அஞ்சலை வீட்டுக்கு குழந்தையுடன் வந்திருந்தாா் பிரியா.

குழந்தையைப் பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு, நேற்று முன்தினம் அஞ்சலையும் பிரியாவும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அங்கிருந்த சிறுவர்களுடன் பவழவேணி விளையாடியுள்ளார். அப்போது அங்கு கழிப்பறைக்காகத் தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்துள்ளார், மழை பெய்து வரும் நிலையில் அந்த குழி நீரால் நிரம்பியுள்ளது. இதனால் நீரில் மூழ்கி பவழவேணி உயிரிழந்துள்ளார்.

இதுபோன்று கோவில்பட்டியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மூர்த்தியின் மூன்று வயது மகன் ருத்ரன். ஒண்டிப்புலி நாயக்கனூரில் தாத்தா வீட்டுக்கு ருத்ரன் வந்திருந்தான். நேற்று காலை வீட்டின் வெளியே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென சிறுவன் மாயமானதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் அருகே இருந்த 10 அடி பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மழை நீர் சேமிப்புக்காக இந்த குழி தோண்டப்பட்டிருக்கிறது. அது மூடப்படாமல் இருந்துள்ளது. மழையின் காரணமாக அந்த குழி நிரம்பியிருந்த நிலையில் அதில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி இறந்துள்ளார். இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சுஜித் மரணத்தைத் தொடர்ந்து, மழலை செல்வங்கள் இதுபோன்று மூடப்படாத குழியில் விழுந்து உயிரிழந்திருப்பது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இனி ஒரு குழந்தை இதுபோன்று ஏற்படாமல் இருக்கப் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் குழந்தைகளை பார்த்துக்கொள்வது மட்டுமின்றி, மூடப்படாமல் இருக்கும் இதுபோன்ற குழிகளை மூட முன்வர வேண்டும்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share