பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் தனது ரசிகர்களிடம் மனம்திறந்து பேசுவதற்காக ட்விட்டரில் ASKSRK என்ற ஹேஷ்டேக்கில் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். தமிழ் சினிமா நட்சத்திரங்களோடும் நெருங்கிப் பழகக்கூடியவர் என்பதால் ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்தவர்களைப் பற்றிக் கேட்டனர். அவர்களில் விஜய் – அஜித் – தனுஷ் ரசிகர்களின் கேள்விக்கு ஷாரூக் பதிலளித்தார்.
விஜய்யை அற்புதமான மனிதர் என்றும், அஜித் நல்ல நண்பர் என்றும், தனுஷை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் பதில் கூறினார். தங்களுக்குப் பிடித்த நடிகரைப் பற்றி பாராட்டினால் யாருக்குத்தான் பிடிக்காது? பிறகு என்ன பிரச்சினை இந்த விஷயத்தில்?
அங்கு ஷாரூக் கானின் ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பதில்கள் இருந்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், மூன்று நடிகரைப் பற்றிய ட்வீட்களையும் பாடலாசிரியர் விவேக் ரீட்வீட் செய்ததும் தொடங்கியது பிரச்சினை.
உள்ளே புகுந்த அஜித் ரசிகர்கள், ‘நீங்கள் அஜித் பற்றிய ட்வீட்டை ரீட்வீட் செய்கிறீர்களா? நம்பவே முடியவில்லையே’ என ஆச்சரியப்பட்டனர். சில விஜய் ரசிகர்கள் அந்த ட்வீட்டை எல்லாம் ஏன் ரீட்வீட் செய்தீர்கள் எனக் கோபித்துக்கொண்டனர். விவேக் 15 பாடல்களுக்கும் மேல் 10 நாட்களில் எழுதி முடித்துவிட்டு அப்போதுதான் ட்விட்டர் வந்ததாக வேறு சொல்லியிருந்தார். எனவே, அவரைப் பிடித்துக்கொண்டு விஜய் – அஜித் என இரு தரப்பு ரசிகர்களும் சண்டையிடத் தொடங்கிவிட்டனர்.
“இரு தரப்பு ரசிகர்களுக்குமே சொல்கிறேன். நீங்க அடிச்சிக்கணும்னு நினைக்கிறவங்கதான் இங்க ஜாஸ்தி. ஆனா, சண்டை போடக் கூடாதுன்னு தளபதி & தல நினைக்கிறாங்க. நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிற 10 பேரையும் காயப்படுத்தாதீங்க. உங்களுக்குத் தெரியணும்ன்றதால சொல்றேன். உங்களால என்னை காயப்படுத்த முடியாது. என்னுடைய இதயம் ரொம்ப வலிமையானது” என்று விவேக் ஒரு எமோஷனல் ட்வீட் போஸ்ட் செய்ததற்குப் பிறகே அவர்கள் கலைந்து சென்றனர்.�,