அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லங்களாக மாற்ற முடியாது என்று கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு நினைவு இல்லங்கள் அமைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி நினைவு இல்லமாக மாற்றத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜெயலலிதா நினைவு இல்லத்தைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் இல்லத்தைப் பராமரிக்க அறக்கட்டளை அமைத்து இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (பிப்ரவரி 4) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘தமிழகத்தில் சமுதாயத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் என 17 பேரின் வீடுகள் நினைவு இல்லங்களாகப் பராமரிக்கப்படுகின்றன. அந்த தலைவர்கள் வாழ்ந்த வீடுகளைக் கையகப்படுத்தி நினைவு இல்லங்கள் அமைப்பது புதிதல்ல’ என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது அதிகாரத்திற்கு உட்பட்டு சட்டமியற்றி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதுபோல நினைவு இல்லங்கள் அமைக்கப் போகிறீர்கள் இந்த நிலை தொடர்ந்தால் அமைச்சர்களின் வீடுகளும் நினைவு இல்லங்கள் ஆக மாற்ற வேண்டிய நிலை வரும் போலிருக்கிறது. பல நீதிபதிகளும் நீதித்துறைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்குச் சிலை அமைக்க நீதிமன்ற வளாகத்தில் இடம் இல்லை. எனவே, தமிழக அரசின் இந்த செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தார். இறுதியாக இம்மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
**-பிரியா**�,