வசந்தகுமார் மறைந்துவிட்டார் என்ற தகவல் கேட்டதும் தமிழ்நாட்டின் பற்பல கிராமங்களைச் சேர்ந்த தாய்மார்கள் கூட, ‘ஐயயோ… வசந்த் அண்ட்கோ ஓனர் இறந்துட்டாரா…’ என்று உச் கொட்டுகின்றனர். ஏனெனில் அவர்களுக்கு அரசியல்வாதி வசந்தகுமாரை விட, தொழிலதிபர் வணிகர் வசந்தகுமார் அவ்வளவு பரிச்சயமாக இருந்திருக்கிறார்.
இந்தியாவின் -தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் பகுதியில் ஹரிகிருஷ்ண நாடார் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சுதந்திரப் போராட்ட தியாகி. வில்லுப்பாட்டு கலைஞரும் கூட. காந்தி கதையை அவர் வில்லுப்பாட்டில் வடிப்பதில் திறமையாளர். அந்தக் காலங்களில் வடசேரி வேட்டிகளும், டவல்களும் கைத்தறி உலகில் பெயர் பெற்றவை. ஹரிகிருஷ்ணனும் அகஸ்தீஸ்வரத்தில் தறி தொழில்தான் செய்து வந்தார். இன்றும் கூட அகஸ்தீஸ்வரத்தில் அவரது வீட்டை தறிப் பெறை என்றுதான் அழைப்பார்கள்.
மூத்த மகன் குமரி அனந்தன், அவருக்குப் பின் நான்கு மகன்கள் பிறந்தும் ஹரிகிருஷ்ணனுக்கு தனக்கு ஒரு பெண் குழந்தை கிடைக்காதா என்று ஏக்கம். 1950 ஆம் ஆண்டு பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள் பிறந்தன. ஒன்று ஆண், ஒன்று பெண். தனக்கு வசந்தம் வந்துவிட்டதை உணர்ந்த ஹரிகிருஷ்ணன் ஆண் குழந்தைக்கு வசந்தகுமார் என்றும், பெண் குழந்தைக்கு வசந்தகுமாரி என்றும் பெயரிட்டு வளர்த்தார்.
**உழைக்கத் தயங்கக் கூடாது**
தனது அனைத்து குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்தார் ஹரிகிருஷ்ணன். கடைக்குட்டி வசந்தகுமார் அகஸ்தீஸ்வரம் பள்ளியில் படித்தார். அதன் பின் நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் பி.ஏ. படித்தார் வசந்தகுமார். எம்.ஏ. சேர வேண்டும் என்று ஆசைப்பட்ட வசந்தகுமார், அப்போதே தானும் ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்று முனைந்தார். அப்போது விவேகானந்தர் கல்லூரி எதிரே வசந்தகுமாரின் தாய்மாமா மதுசூதனப் பெருமாள் கேண்டீன் நடத்தி வந்தார். சற்றும் தயங்காமல், ‘மாமா… எனக்கு உங்க கேண்டீன்ல ஒரு வேலை போட்டுத் தாரீங்களா… உழைச்சு சம்பாதிக்கணும்னு ஆசைப்படறேன்’ என்று வசந்தகுமார் கேட்க, மகிழ்ந்த தாய்மாமா வசந்தகுமாருக்கு வேலை கொடுத்தார். டீ எடுத்துக் கொடுப்பது, போண்டா மடிப்பது என்று வேலைபார்த்து மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம் பெற்றார் வசந்தகுமார். அப்படியே எம்.ஏ. படித்து முடித்தார். கடைக்குட்டி தம்பி எம்.ஏ. படித்தபோது அண்ணன் குமரி அனந்தன் தமிழக இளைஞர் காங்கிரசின் மாநிலத் தலைவர்.
‘அண்ணே மெட்ராசுல ஏதாச்சும் என்னை வேலைக்கு சேத்துவிடுங்கண்ணே’ என்று அண்ணனிடம் கேட்டிருக்கிறார் தம்பி. யாரிடமும் யாசகம் கேட்கத்தான் தயங்க வேண்டும்… உழைப்பதற்கு என்றுமே தயங்கக் கூடாது என்று வசந்தகுமார் அடிக்கடி சொல்லுவார். அந்த மனநிலை அந்த சின்னப் பிஞ்சுப் பருவத்திலேயே அவரிடம் உறுதியாய் இருந்தது.
தம்பி தன்னிடம் வேலை கேட்டதும் யாரிடம் இவனை வேலைக்கு சேர்த்துவிடலாம் என்ற யோசனை குமரி அனந்தனுக்குள் ஓடியது. அப்போதுதான் சட்டெனெ விஜிபி ஞாபகம் வந்தது. வி.ஜி.பன்னீர்தாஸ் சென்னை சைதாப்பேட்டையில் அப்போது வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வந்தார். அவருக்குச் சொந்த ஊர் வள்ளியூர் பக்கம்தான். அந்த வகையில் குமரி அனந்தனுக்கு மிகவும் அறிமுகமானவர். அவரிடம் தன் தம்பிக்கு ஒரு வேலை கொடுக்குமாறு கேட்க, வசந்தகுமார் எம்.ஏ. படித்த ஒரு பட்டதாரியாக சென்னை சைதாப்பேட்டையில் விஜிபியின் ஷோரூமில் வேலைக்குச் சேர்ந்தார். அந்தநாள்தான் வசந்தகுமாரின் வாழ்வில் திருப்பு முனை நாள்.
**முதல் பணி முதல் கடை**
சைதாப்பேட்டை விஜிபி ஷோருமில் பத்து வருடங்கள் சேல்ஸ்மேனாக பணியாற்றினார் வசந்தகுமார். அப்போது தான் எதிர்கொண்ட ஒவ்வொரு வாடிக்கையாளரையும் ஒரு புத்தகம் போலவே படித்தார் . வருகிறவர்களின் தேவை என்ன, அவர்களின் பொருளாதாரக் கொள்ளளவு என்ன அவர்கள் சுமையில்லாமல் எப்படி வணிகம் மேற்கொள்வது என்பதையெல்லாம் அங்கேதான் அறிந்தார். தமிழ்நாட்டிலேயே தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருட்களை முதன் முதலில் விற்பனை செய்தது விஜிபி நிறுவனம்தான். மேலும் அவர்கள் அப்போது கடையை விளம்பரப் படுத்த வேறு எந்த மாடலையோ சினிமா நடிகரையோ அணுகியதே இல்லை. வி.ஜி.பன்னீர்தாஸின் படத்தைத்தான் விளம்பரத்துக்குப் பயன்படுத்துவார்கள். இதையெல்லாம் நன்கு உள்வாங்கிக் கொண்டார்.
பத்து வருடம் பணியாற்றிய பின் தானும் இதேபோல சொந்தமாக ஒரு கடை வைக்க வேண்டுமென்று முடிவெடுக்கிறார் வசந்தகுமார். அதை விஜி. பன்னீர்தாஸிடம் சொல்கிறார். அதன் பின் அங்கிருந்து விடுபட்டு தி.நகரில் தற்போது பஸ் நிலையத்துக்கு அருகே இருக்கும் அந்த இடத்தை கடைக்காக தேர்ந்தெடுக்கிறார் வசந்தகுமார். அப்போதைய அவரது நண்பர் அரிசிக் கடை பாண்டியனுடைய இடம் அது. ‘வசந்த்… நீ கடை நடத்துப்பா. அட்வான்ஸ் எல்லாம் வேணாம்ப்பா’ என்று நண்பன் அரிசிக்கடைப் பாண்டியன் சொன்னதுதான் வசந்தகுமாரின் உழைப்பும், நல்வாய்ப்பும் ஒன்று சேர்ந்த இடம்.
முதலில் இரும்புக் கம்பிகளில் ஒயர்களால் பின்னப்பட்ட நாற்காலிகள் ஐந்து வாங்கிப் போட்டார் வசந்தகுமார். ஒன்று இருபது ரூபாய்க்கு வாங்கி 25 ரூபாய்க்கு விற்றார். நாற்காலிகளை வாங்குபவர்களுக்கு தனது சைக்கிளில் தானே சென்று டோர் டெலிவரி செய்வார். அதேபோல இருபத்தைந்து ரூபாயை தவணை முறையில் வசூலிப்பார். மெல்ல மெல்ல இந்த வணிகம் வசந்தகுமாருக்கு வசந்தத்தை அதிகரித்தது.
**பன்னீர்தாஸிடம் கற்ற பாடங்கள்**
தனது வியாபாரத்தில் முழுக்க முழுக்க பத்து வருடம் பன்னீர் தாஸிடம் கற்ற பாடங்களையே பின்பற்றினார். கடைக்கு வசந்த் அண்ட் கோ என்று தன் பெயரையே வைத்தார். அதிலும் கடை வாசலில் தனது படத்தையே வரைந்துவைத்தார். கன்னங்கரேலென இருக்கும் உங்க படத்தை போடலாமா என்று சிலர் கேட்டபோது கூட, ‘விளம்பரத்துல இருக்குற படம் வாடிக்கையாளர் கடைக்கு வரும்போது நேர்ல பாக்க கூடியவரா இருக்கணும். அப்பதான் இனிமே எப்ப விளம்பரத்தைப் பார்த்தாலும் அவங்களுக்கு கடை ஞாபகம் வரும். யாரோ ஒரு நடிகரைப் போட்டு அவர் ஞாபகத்தை எதுக்கு நம்ம காசுல வரவைக்கணும்?’ என்று கேட்டார் வசந்தகுமார். இது பன்னீர் தாஸ் கற்றுக் கொடுத்த பாடம். சைக்கிளில் டோர் டெலிவரி செய்துகொண்டிருந்த வசந்தகுமார் முதல் முதலில் கார் வாங்கியது ஒரு திருப்புனை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது.
சாலிடர் டிவி அப்போதுதான் சந்தைக்கு வந்திருந்தது. அப்போது வசந்த் அண்ட்கோ சென்னையில் மட்டும்தான் இருந்தது. அடுத்த கடைகளுக்கான முயற்சியில் இருந்தார் வசந்தகுமார். சாலிடர் டிவிக்கு முகவர்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து அப்போதைய பம்பாய் அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். மெலிந்த உருவம், தெக்கத்திக் கறுப்பு என்று வசந்தகுமாரைப் பார்த்ததுமே அந்நிறுவனத்தார் ஏஜென்சி எடுக்கவா வந்திருக்கிறீர்கள் என்று ஆச்சரியப்பட்டனர். அவர்களிடம் தனது கடை பற்றியும் வியாபார உத்தி பற்றியும் விவரித்து கட்டணம் செலுத்தி, சென்னைக்கான சாலிடர் டிவியின் டீலர்ஷிப்பை வாங்கினார் வசந்தகுமார். மிகக் குறுகிய காலத்தில் சாலிடர் டிவி விற்பனையில் நம்பர் ஒன் டீலராக பெயர் பெற்றார். அதற்காக சாலிடர் டிவி நிறுவனம் வசந்தகுமாருக்கு 3335 என்ற எண் கொண்ட அம்பாசிடர் காரை பரிசளித்தது. அதுதான் வசந்தகுமார் வாங்கிய முதல் கார். அதுமுதல் இப்போது வரை தான் பயன்படுத்தும் கார்களுக்கு 3335 என்ற எண்ணே வருமாறு பார்த்துக்கொள்வார். ஏனெனில் அந்த முதல் காரின் மீது அவ்வளவு செண்டிமெண்ட்.
**கோட் சூட்- பிறந்தநாள்**
வசந்தகுமார் தனது கடைக்கு தன் புகைப்படத்தைத்தான் அதுவும் துள்ளலான உற்சாகமான சிரிப்புடன் கூடிய புகைப்படத்தைதான் பிராண்ட் புகைப்படமாக பயன்படுத்தினார். அதேபோல பொது இடங்களுக்கு வரும்போதும், கடைக்கு வரும்போதும் கோட் சூட் அணிவதை வழக்கமாகக் கொண்டார். தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வெற்றிபெற்றதும் கோட் சூட் அணிவதை வழக்கமாக்கினார். இதுவும் வி.ஜி. பன்னீர்தாஸிடம் அவர் கற்ற பாடமே. தனது ஒவ்வொரு பிறந்தநாளன்றும் விஜிபியை சந்தித்து அவர் காலைத் தொட்டு வணங்குவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார் வசந்தகுமார்.
வர்த்தகத்தில் தான் பின்பற்றிய அதே நேர்மையை, அரசியலிலும் பின்பற்றி சிறந்த அரசியல்வாதி என்றும் பெயரெடுத்தார். யாரிடத்திலும் அடித்துப் பிடுங்காதவர் என்பது மட்டுமல்ல… ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் ரூபாய் அடுத்தவர்களுக்கு உதவக் கூடியவர். எம்.எல்.ஏ. ஆனதும் தனது ஒவ்வொரு மாத சம்பளத்தையும் ஒரு அரசுப் பள்ளிக்குக் கொடுத்தவர்.
அரசியல், வர்த்தகம் இரு துறைகளிலும் வசந்தகுமாருக்கு உகந்தது அசராத உழைப்பு மட்டுமே!
**-ஆரா**
�,”