கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்தது. 1993 முதல் இந்தியாவில் 620 பேர் உயிரிழந்த நிலையில் இதில் தமிழகத்தில் மட்டும் 144 பேர் இறந்திருப்பதாகத் தெரியவந்தது.
இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இன்று, சென்னையில் ஒருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் இன்று காலை ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், ரஞ்சித்குமார், யுவராஜ் உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கழிவு நீர்த் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது ரஞ்சித் குமாரை விஷவாயு தாக்கியதால் அவர் மயங்கியுள்ளார்.
அதைப்பார்த்த அவருடைய அண்ணன் அருண் குமார், தம்பியைக் காப்பாற்றக் கழிவு நீர்த் தொட்டியில் இறங்கியுள்ளார். ரஞ்சித் குமாரை மேலே தூக்கிவிட்டுக் காப்பாற்றிய அருண் குமார் தானும் மேலே ஏற முயன்றுள்ளார். அப்போது, அருண் குமாரை விஷவாயு தாக்கியதில் அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. அருண் குமாருக்குத் திருமணமாகி தற்போது தான் 7 மாத குழந்தை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டது குறித்துத் தகவலறிந்து வந்த அண்ணாசாலை காவல் ஆய்வாளர் சந்திரமோகன், அருண்குமார் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போதிய உபகரணங்கள் இல்லாமல் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியதால் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அருண்குமார் உட்பட ஐந்து பேரை ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் தான் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திற்கு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்கு அழைத்து சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
�,