பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வித்தியாசமான முறையில் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் இறங்கியுள்ளது படக்குழு.
இரும்புத்திரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ஹீரோ. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜூன், இவானா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருந்த படக்குழு, நேற்று(நவம்பர் 24) இரவுடன் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது. இது குறித்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தனது டிவிட்டர் பக்கத்தில், “இது ஒரு காட்டு சவாரி தான்! இந்த அற்புதமான ஷெட்யூல் முழுவதும் அயராது உழைத்த எனது தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் பெரிய நன்றி” என தெரிவித்து ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதற்காக ஆக்மெண்டட் ரியாலிட்டி ‘ஹீரோ’ கேம் ஒன்றை உருவாக்கி நேற்றே(நவம்பர் 24) வெளியிட்டுள்ளனர். ஆன்ட்ராய்டு இயங்குதளத்திலும், IOS இயங்குதளத்திலும் தற்போது இந்த கேம் வெளியாகியுள்ளது. படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் இந்த கேமை ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் விளையாடியும், அதில் வெற்றி பெற்றதை புகைப்படங்களாக பதிவிட்டும் வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. டிசம்பர் 20ஆம் தேதி, இப்படம் திரைக்கு வரவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
�,”