தஞ்சையில் உள்ள சாஸ்திரா பல்கலையில் பிஎச்.டி படித்து வந்த சென்னையைச் சேர்ந்த மாணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சையை அடுத்துள்ள திருமலை சமுத்திரம் அருகே சாஸ்திரா பல்கலைக் கழகம் உள்ளது. இப்பல்கலையில் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் ரகுவரன்(30) பிஎச்.டி படித்து வந்தார். இவர் ஏற்கனவே சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலையில் உயர் கல்வியும் படித்திருக்கின்றார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தான் சாஸ்திரா கல்லூரியில் சேர்ந்து பயோ டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
நேற்று வழக்கம் போல் வகுப்புக்கு சென்ற ரகுவரன் மதிய வேளையில் பல்கலை விடுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வராததால், சக மாணவர்கள் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். கதவைத் தட்டியும் திறக்கப்படாததால், விடுதி வார்டன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ரகுவரன், கல்லூரிக்குச் சென்றபோது அணிந்து இருந்த ஆடைகளுடனும், கல்லூரி ஐ.டி. கார்டு கழுத்தில் அணிந்திருந்த நிலையிலும் மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து வல்லம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரகுவரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவனின் தந்தைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவரும் தஞ்சை விரைந்திருக்கின்றார்.
ஆனால் மாணவர் தற்கொலை செய்து கொண்டது மர்மமாகவே இருக்கிறது. விடுதி வார்டன் அளித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
�,