ரஜினி-கமல் அரசியலில் இணைவது தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினியும் கமலும் அரசியலில் இணைய வேண்டும் என இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச, அது தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை உண்டாக்கியது. இதுதொடர்பான கேள்விக்கு தனித்தனியாக பதிலளித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர், ‘மக்கள் நலனுக்காக தேவைப்பட்டால் இணைந்து பயணிப்போம்’ எனக் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக இன்று மீண்டும் விளக்கம் அளித்த கமல்ஹாசன், ‘தேவைப்பட்டால் இணைவோம் என்றுதான் இருவரும் சொல்லியிருக்கிறோம். அதுவும் தமிழர்களின் நலனுக்காகத்தான். அது எந்த தேதி என்றெல்லாம் தற்போது சொல்ல முடியாது. எங்கள் நட்பை விட முக்கியமான செய்தி தமிழக நலம்தான்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 20) செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அதிமுக என்னும் மக்களுக்கான மாபெரும் இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. அதிமுகவின் அடித்தளம் மிகவும் பலமாக உள்ளது. எந்த சூழ்நிலையிலும் எந்த நிலையிலும் யார் கட்சி தொடங்கினாலும், யார் இணைந்தாலும் எந்தவித பாதிப்பும் எங்களுக்கு இருக்காது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி-கமல் இணைவு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “எல்லோரும் இணைந்துகொள்ளுங்கள். அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அதிமுக தலைமையிலான கூட்டணி பலம் மிக்க வலுவான கூட்டணியாக உள்ளது. எங்கள் கூட்டணிக்கு முன், கமல் – ரஜினி இணைவதெல்லாம் பெரிய அளவில் பேர் சொல்லும்படி இல்லை.
மூன்று பேராக வந்தாலும் சரி, மொத்தமாக வந்தாலும் சரி அதிமுக கூட்டணி முன் அதெல்லாம் தூள் தூளாகிவிடும். இவர்களெல்லாம் சேர்ந்து ஒரு மாய பிம்பத்தை உருவாக்குகிறார்கள். கமல், ரஜினி, விஜய் ஆகியோர் மாய பிம்பங்கள். தமிழக அரசியலில் அவர்கள் எடுபடாத சக்திகள்தான்” என்று தெரிவித்தார்.
மேலும், “தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசென்ட் நடிகர் அஜித். நடிகர் அஜித் கண்ணியமானவர் ; தொழில் பக்தி மிக்கவர்” எனவும் பாராட்டினார்.�,