ஜூன் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மார்ச் இறுதி முதல் நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், அண்மையில் ஜூன் 30 வரை சிறப்பு ரயில்களைத் தவிரப் பயணிகள் ரயில் இயக்கப்படாது என்று ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. முன்பதிவு செய்திருந்தாலும் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுவிடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் நேற்று (மே 19) மாலை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நாடுமுழுவதும் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தவிர ஜூன் 1ஆம் தேதி முதல் 200 ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளாகும். இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும். அதுபோலவே ரயில்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளது.
அதுபோன்று, இந்திய ரயில்வே தொடர்ந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ரயில்களை இயக்குகிறது. இதுவரை மொத்தம் 1600 ரயில்கள் மூலம் சுமார் 21.5 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
**-கவிபிரியா**�,