தமிழ்நாட்டில் போலீஸ் காவல் மரணங்கள் குறைந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த மகன், தந்தை ஆகியோரின் மரணம் நாட்டையே உலுக்கியது. சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படமும், போலீஸ் காவலில் உள்ளவர்களை போலீஸார் செய்யும் சித்திரவதைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியது.
இந்த நிலையில்,நேற்று (நவம்பர் 30) மக்களவையில் காவல் விசாரணை சித்திரவதைகள் தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துபூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
அதில், “2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 37 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் 348 பேர் போலீஸார் விசாரணையின்போது உயிரிழந்தனர். இதே காலகட்டத்தில் நீதிமன்றக் காவலில் சிறையில் இருந்த 5,221 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடமிருந்து (NHRC) பெறப்பட்ட தகவலின்படி, 2021ஆம் ஆண்டு நவம்பர் 15 வரை மகாராஷ்டிராவில் 26 பேரும், குஜராத்தில் 21 பேரும், பிகாரில் 18 பேரும், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் தலா 11 பேரும் போலீஸ் காவலில் உயிரிழந்தனர். டெல்லியில் போலீஸ் காவல் மரணங்கள் பதிவாகவில்லை. இந்த வரிசையில் போலீஸ் காவல் மரணங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த 2018-19ஆண்டில் 11 ஆக இருந்த போலீஸ் காவல் மரணங்கள், 2019-2020 ஆண்டில் 12 ஆகவும், 2020-2021ஆண்டில் 2 ஆகவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில், நீதிமன்றக் காவல் மரணங்களைப் பொறுத்த அளவில், 2018-2019 ஆண்டில் 89 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2019-2020 ஆண்டில் 57 ஆகவும், 2020-2021 ஆண்டில் 61 ஆகவும் உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7ஆவது அட்டவணையின்படி, காவல் துறை மற்றும் பொது ஒழுங்கு மாநிலப் பட்டியலில் உள்ளவை. காவல்துறையின் அட்டூழியங்களை உரிய முறையில் தடுப்பதும், நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதும், குடிமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் முதன்மைப் பொறுப்பாகும். இது மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் உள்ளதால், காவல் மரணங்களில் ஒன்றிய அரசு தலையிடுவதில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,