Zதமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை!

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், நோய் எதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்கும் பல்வேறு சிகிச்சை முறைகளை மருத்துவமனைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இதனிடையே டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் பிளாஸ்மா சிகிச்சை முறையைப் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து அதனைப் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்குச் செலுத்தி சோதனை அடிப்படையில் நோயைக் குணப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றிடம் அனுமதி பெற்று, உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 20 நபர்களுக்குச் சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 18 பேர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்த கூறுகளைத் தனியாகப் பிரித்து எடுக்கும் கருவியின் மூலம் 500 மில்லி பிளாஸ்மா பெறப்பட்டு நோய்த்தன்மை மிதமாக உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

18 முதல் 65 வயது உடையவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்கத் தகுதியுடையவர்கள். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை முடிந்து குணமடைந்த பின்னர் எடுக்கப்படும் பரிசோதனையில் எதிர்மறையான பரிசோதனை முடிவு பெறப்பட்ட நாளிலிருந்து 14ஆவது நாள் பிளாஸ்மா தானம் அளிக்கலாம்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய்த்தொற்று மற்றும் புற்றுநோய் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தானம் வழங்க இயலாது.

தானம் வழங்க முன் வருபவர்களுக்கு உரியப் பரிசோதனை மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அளவிடப்பட்டு தகுதியான கொடையாளர்களிடமிருந்து பிளாஸ்மா பெறப்படும். இதற்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒருமுறை தானம் செய்தவர்கள் 28 நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாவது முறையாக தானம் அளிக்கலாம்.

இவ்வாறு பெறப்படும் பிளாஸ்மா 40 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் ஓராண்டு வரை பாதுகாக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும்போது பயன்படுத்தப்படும்.

கோவிட் 19 நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மற்றும் இதர மருந்துகள் பயனளிக்காத போதும், ஆக்சிஜன் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் போதும் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயிலிருந்து குணமடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. இரண்டு நாட்களுக்கு தலா 200 மில்லி வீதம் பிளாஸ்மா செலுத்தப்பட வேண்டும். இது உடலில் இருக்கும் வைரசின் செயல்பாட்டை நடுநிலை ஆக்கி வைரஸ் எண்ணிக்கையையும் குறைத்து நோயாளிகள் செயற்கை ஆக்சிஜன் தேவையைக் குறைக்க உதவுகிறது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியினை 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லியைத் தொடர்ந்து இந்தியாவில் அமையவிருக்கும் இரண்டாவது பிளாஸ்மா வங்கி இதுவாகும். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்து பிளாஸ்மா சிகிச்சை வழங்கத் தகுதியானவர்கள் எவ்வித தயக்கமும் பயமும் இன்றி தாமாக முன்வந்து தானம் செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share