பதஞ்சலி என்ற பெயரில் ஆயுர்வேத பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் பாபா ராம்தேவ் தனது தொழிற்சாலை ஒன்றை தென்மாவட்டத்தில் அமைப்பதற்கு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் ராஜ்ய சபை உறுப்பினருமான சசிகலா புஷ்பா சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு நெருக்கமான யோகா சாமியார் பாபா ராம்தேவை சந்தித்திருக்கிறார்.
அப்போது தமிழ்நாட்டில் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையும், பனை மரங்களால் மட்டுமே மண்ணின் நீர்ப் பிடிப்பு திறனை அதிகரிக்கச் செய்யமுடியும் என்பது குறித்தும் பாபா ராம்தேவிடம் கூறியிருக்கிறார்.
தமிழ் நாட்டில் குறிப்பாகத் தென் மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் இருக்கும் நிலையில் பனை வழி பொருட்களை பதஞ்சலி நிறுவனம் மூலமாக உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் ராம் தேவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் சசிகலா புஷ்பா. இதன் மூலம் பனைமரங்களை அழிவில் இருந்து காக்கவும் மேலும் பனை மரங்களை வளர்க்கவும் முடியும் என்றும் பாபா ராம்தேவ் இடம் சசிகலா புஷ்பா யோசனை தெரிவித்திருக்கிறார்.
பதஞ்சலி நிறுவனம் தற்போது பல்வேறு ஆயுர்வேத பொருட்களையும் இயற்கை சார்ந்த உணவு பொருட்களையும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் பனை வழி பொருட்களையும் பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்யும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் பதஞ்சலி நிறுவனத்திற்கு தொழிற்சாலை அமைக்க இடம் உதவி செய்வதற்கும் தயாராக இருப்பதாக சசிகலா புஷ்பா பாபா ராம்தேவ் இடம் தெரிவித்துள்ளார்.
இது நல்ல யோசனை என்று ஏற்றுக்கொண்ட பாபா ராம்தேவ் பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பனை ஓலை மூலம் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தலாம் என்றும் பிளாஸ்டிக்குக்கு சரியான மாற்று வழி பனைப் பொருட்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தென் மாவட்டத்தில் பனை வழி உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படுவதற்கான ஒரு ஆரம்ப கட்ட நல்ல அறிகுறி தெரிகிறது. இதை அப்படியே விட்டுவிடாமல், பாபா ராம் தேவிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி பதஞ்சலியின் பனை ஆலையை தென் மாவட்டத்தில் கொண்டுவரவேண்டுமென்று சசிகலா புஷ்பாவிடம் அவரது நண்பர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளார்கள்.
�,”