தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தர வேண்டிய மானியத்தொகையை உடனடியாக வழங்குவதற்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்த பிறகு, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 1-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது, மூன்றாவது அலை தீவிரமாக பரவி வருவதால், ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தொகையை உடனடியாக வழங்கிட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான இறுதி கற்பிப்பு, பராமரிப்பு மானியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். இவற்றை மார்ச் 4 ஆம் தேதிக்குள்ளாக வழங்கி, மார்ச் 15ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் மானியம் வழங்கும் முன் பள்ளிகளில் உள்ள பணியிடங்கள், மாணவர்கள் விவரம், கட்டடங்களின் சான்று, சொத்து விவரம் ஆகியவற்றை சரிபார்த்து அதற்கேற்ப மானியம் விடுவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,