பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளுக்கு வழங்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று (அக்டோபர் 14) அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் பொருளாதார அறிஞரான அபிஜித் பானர்ஜி இந்த விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளது இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தாண்டு பொருளாதாரத்துக்கான விருது மூன்று பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.
இதில் அபிஜித் பானர்ஜி, அமெரிக்காவில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அபிஜித்தின் மனைவியும் பொருளாதார அறிஞருமான எஸ்தர் டூப்ளோ, அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு பொருளாதார அறிஞர் மைக்கேல் கிரிமர் ஆகிய மூன்று பேருக்கும் இந்த ஆண்டுக்கான பொருளாதாரப் பிரிவுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
உலகளாவிய வறுமையைப் போக்கும் வகையில், சோதனை அடிப்படையிலான அணுகுமுறையைக் கண்டறிவதில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்கள் இவர்கள். ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இவர்களுக்கான நோபல் பரிசை அறிவித்தபோது…
“பரிசு பெற்றவர்களின் ஆராய்ச்சி முடிவுகள், அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஆராய்ச்சியாளர்கள், நடைமுறையில் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான நமது திறனை வியத்தகு முறையில் மேம்படுத்தியுள்ளனர். அவர்களின் ஓர் ஆய்வின் நேரடி விளைவாக, ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இந்தியக் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது. இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் சேர்த்து 9.18 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ.5.61 கோடி) பரிசும், தங்கப்பதக்கமும், விருதுப் பட்டயமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசுப் பணத்தை மூன்று விஞ்ஞானிகளும் சரிசமமாய் பகிர்ந்துகொள்வர்.
**பண மதிப்பிழப்பைக் கடுமையாக விமர்சித்த அபிஜித் பானர்ஜி**
அபிஜித் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பழிப்பைக் கடுமையாக எதிர்த்தவர். நேற்றுகூட அமெரிக்காவிலுள்ள ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அபிஜித், இந்தியப் பொருளாதாரம் தற்போது நெருக்கடியில் இருப்பதாகக் கூறினார். அபிஜித் கூறியதாவது: “பண மதிப்பழிப்பின் பாதிப்பு ஆரம்பத்தில் நாம் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக இருக்கிறது. தற்போதைய பொருளாதார அழுத்தத்துக்கான வேர் பண மதிப்பழிப்பில் இருந்துதான் தொடங்குகிறது.
முதலீடுகள் 75 சதவிகிதம் சரிந்துவிட்டது; ஏற்றுமதிகள் வளரவில்லை; இது ஒரு நெருக்கடி என்று நான் நினைக்கிறேன். இந்தியப் பொருளாதாரத்தின் நிலை நடுங்கிக்கொண்டிருக்கிறது. தற்போதைய வளர்ச்சி அளவைப் பார்க்கும்போது, இனிவரும் காலங்களில் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் என உறுதியாகக் கூற முடியவில்லை. கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளில், குறைந்தபட்சம் நாம் சில வளர்ச்சியையாவது கண்டிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலையில், அந்த உத்தரவாதமும் இல்லாமல் போய்விட்டது” என்று கூறியுள்ளார் 58 வயதில் நோபல் வென்றிருக்கும் பொருளாதார வல்லுநரான அபிஜித் பானர்ஜி.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அறிவித்த நியாய் திட்டத்தின் ஆலோசகராக இருந்தவர் அபிஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
�,