முஷரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது வேதனையைத் தருவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவப் புரட்சி மூலம் 1999ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றி பாகிஸ்தான் அதிபராக 2001ஆம் ஆண்டு முதல் 2008 வரை பதவி வகித்த பர்வேஷ் முஷரப், 2007ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தினார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளையும் கைது செய்து அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டார்.
அதன்பிறகு நவாஷ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆட்சிக்கு வந்தது. அவசர நிலையை அமல்படுத்தியதற்காக முஷரப் மீது 2013ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று (டிசம்பர் 17) வழங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஷாவர் சிறப்பு நீதிமன்றம், முஷரப்புக்குத் தூக்கு தண்டனை விதித்தது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவம், “ஜெனரல் பர்வேஷ் முஷரப்புக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ராணுவத் தலைவராகவும், ஊழியர்கள் கூட்டுக் குழுவின் தலைவராகவும், பாகிஸ்தான் அதிபராகவும் 40 ஆண்டுகள் முஷரப் நாட்டுக்காக பணியாற்றியுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்காகப் பல்வேறு போர்களில் பங்கேற்றுப் போரிட்ட ஒருவர் நிச்சயம் தேசத் துரோகச் செயல்களில் ஈடுபட்டிருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.
மேலும், “இந்த வழக்கில் அரசியலமைப்பு உள்ளிட்ட சட்ட நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படாமல் மிக விரைவாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. வழக்கு அவசர அவசரமாக முடிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் அரசியலமைப்புக்கேற்ப நீதி வழங்கப்படும் என ராணுவம் எதிர்பார்க்கிறது” என்று பாகிஸ்தான் ராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Statement on decision by Special court about General Pervez Musharraf, Retired. pic.twitter.com/C9UAMT1E4W
— DG ISPR (@OfficialDGISPR) December 17, 2019
2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வரும் முஷரப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மரண தண்டனை குறித்து முஷரப் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் ட்விட்டரில் வெளியிடப்பட்ட அறிக்கையை முஷரப் ரீட்விட் செய்துள்ளார்.�,”