cகொரோனா – வதந்திகளை நம்பவேண்டாம்: மோடி

Published On:

| By Balaji

சீனாவின் வுகானில் தொடங்கி உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி வருகிறது கொரோனா வைரஸ். மக்களின் உயிரைக் குடிக்கும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 3,497 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியிருக்கும் இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் 31 பேரைப் பாதித்துள்ளது. இதனால் வைரஸ் பாதிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி மலிவு விலை மருந்து திட்டப் பயனாளிகளிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், கொரோனா குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். கொரோனா அறிகுறி குறித்த சந்தேகம் இருந்தால் முதலில் மருத்துவர்களிடம் சென்று என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று அவர்களது ஆலோசனையைப் பெறுங்கள். அதைத் தவிர்த்து வதந்திகளை நம்ப வேண்டாம். தனிப்பட்ட முறையில் சுகாதாரத்தைப் பேண வேண்டும். மற்றவருடன் கைகுலுக்குவதைத் தவிர்க்க வேண்டும். இந்த வைரஸ் உலகத்துக்கு முன்னாள் பெரிய சவாலாக இருக்கிறது. எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து நிலைமையைச் சமாளிக்க வேண்டும் என்று நாட்டுமக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்,

இதனிடையே காஷ்மீரில் இருவருக்கு கொரோனா இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. எனவே ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று மார்ச் 31ஆம் தேதி வரை மாநிலத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share