மாதவரம் தனியார் மருந்து தயாரிப்பு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட தீயை சுமார் 24 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இன்று (மார்ச் 1) பிற்பகலில்தான் தீயணைப்புத் துறையினர் கட்டுப்படுத்தியுள்ளனர். ஆனாலும் ஒரு நாள் முழுதும் பரவிய புகையால் மாதவரம், ரெட்டேரி என வடசென்னையின் பெரும்பாலான பகுதி மக்கள் பீதியடைந்திருக்கிறார்கள். பலருக்கு கண்ணெரிச்சல், இருமல், வாந்தி வருவதாக மக்கள் கூறிவருகிறார்கள்
நேற்று (பிப்ரவரி 29) மாலை பிடித்த தீயை அணைக்க கிட்டத்தட்ட இன்று வரை ஆகிவிட்டது. மருந்து தயாரிக்கும் மூலப் பொருட்கள் திட, திரவ வடிவில் இந்த குடோனில் பெருமளவு வைக்கப்பட்டிருந்தன. வெல்டிங் தீப்பொறி காரணமாக தீ பற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று பிற்பகல் வரை குடோனை சுற்றி எரிந்த தீயை அணைத்த தீயணைப்புப் படையினர், குடோனின் மையப் பகுதியில் எரிந்த தீயை இன்று மாலை அணைத்தனர். தீ அணைந்த பின்னாலும் புகை வருவது நிற்காததால், அடுத்த கட்ட ஏற்பாடுகளுக்காக தீயணைப்புத் துறையினர் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்கள்.
மருந்துகள் தயாரிப்பதற்கான வேதி மூலப் பொருட்கள் மூலம் பற்றிய தீ என்பதால் அதன் புகையை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் எரிந்தவை என்ன மாதிரியான வேதிப் பொருட்கள் என தெரியவேண்டும். அதுபற்றிய விசாரணையும் ஒருபக்கம் நடந்து வருகிறது.
தீயணைப்பு அதிகாரிகளோ, “மூன்று நாட்கள் பிடிக்கும் இந்த வேலையை இருபத்து இரண்டு மணி நேரத்தில் முடித்திருக்கிறோம். 32 வாகனங்கள் மூலம் அணைத்திருக்கிறோம்” என்கிறார்கள்.
இவ்வளவு மக்கள் அடர்த்தி மிக்க பகுதியில் இந்த மருந்து குடோனுக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி, எரிந்த புகையால் சுற்றுப்புற மக்கள் என்ன மாதிரியான உடல் பாதிப்புகளுக்கு ஆளாகப் போகிறார்கள்? குழந்தைகள், முதியவர்களின் கதி என்ன என பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுற்றுச் சூழல் செயற்பாட்டாளரான பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் சுந்தர்ராஜன்,
“சென்னை மாதவரத்தில் நேற்று இரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து கட்டமைப்பில் உள்ள பல போதாமைகளை எடுத்துக்காட்டியுள்ளது. தீயணைப்பு வீர்களுக்கு முக கவசம் கூட இல்லாதிருப்பது எந்த விதத்தில் நியாயம்? பல மணி நேரத்திற்கு பிறகும் அந்த கிடங்கில் எரிந்தது என்ன வகையான இரசாயனப் பொருள் என்று தெரிவிக்கவில்லை.
25,000 உயிர்களை பலிஎடுத்த போபால் விபத்து நடைபெற்ற தேசத்தில் நாம் என்ன பாடம் கற்றுக்கொண்டுள்ளோம்? கார்பைட் ஆலையில் இருந்து வெளியேறியது மீத்தைல் அசோசைனைட் என்று அறிவித்திருந்தால் அதற்கான anti-dode கொடுத்திருக்கலாம், ஆனால் அப்படி எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை அன்று காப்பாற்றியிருக்கலாம்.
இவ்வளவிற்கு பிறகும் இவ்வளவு அலட்சியம் என்றால் இந்த கட்டமைப்பை என்ன சொல்வது? மக்களுக்கு இந்த கட்டமைப்பின் மீது அவநம்பிக்கை அதிகமாவது எந்த வகையான எதிர்வினையை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் இப்படி நடந்துகொள்வது ஏமாற்றம் அளிக்கிறது”என்கிறார்.
ஒரே நேரத்தில் இன்று இரு மருத்துவக் கல்லூரிகளுக்கு தென் மாவட்டங்களில் அடிக்கல் நாட்டியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் வடசென்னையில் நேற்றும் இன்றும் மக்கள் மாதவர புகை பீதியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
**-வேந்தன்**�,