ஆடை இந்தி ரீமேக்கில் கங்கனா ரனாவத் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.
ரத்தின சிவா இயக்கத்தில் அமலாபால் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘ஆடை’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் ஆரம்பித்து அதன் டீசர், ட்ரெயிலர் என அனைத்துமே சர்ச்சைக்கு உள்ளானது. திரைப்படம் வெளியான பின்னர் அமலாபாலின் தைரியமும், நடிப்பும் பாராட்டப்பட்டாலும் படத்தின் மீது பல்வேறு எதிர்மறை விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது.
பல சர்ச்சைகளையும் தாண்டி படத்தின் மையக்கருத்தும் அதன் நோக்கமும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், ஆடை படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாகவும் அமலாபால் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் மகேஷ் பட் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆடை இந்தி ரீமேக் தொடர்பாக பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான அருண்பாண்டியன் விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ‘ஆடை திரைப்படத்தின் மைய கதாபாத்திரத்தை மிகத் துணிச்சலாக அமலாபால் கையாண்டிருந்தார். படத்தில் இடம் பெறும் நிர்வாண காட்சிகள் தமிழ் திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. ஆடை படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எனது நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால், அமலாபால் கையாண்ட கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கங்கனா ரனாவத்தை நாங்கள் அணுகவில்லை’ என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஆடை இந்தி ரிமேக்கில் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் தவறானவை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.�,”