கறுப்பர் கூட்டம் சேனலுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Balaji

கந்த சஷ்டி கவசத்தை இழிவாகச் சித்தரித்து யூடியூப் சேனலில் வீடியோ வெளியிடப்பட்டதைக் கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் இன்று அக்கட்சியினர் தங்கள் வீடுகளுக்கு முன்பு கடவுள் முருகன் படத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. கடவுள்கள் பற்றியும் மோசமான விமர்சனங்கள் அந்த சேனலில் வெளியிடப்பட்டிருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கறுப்பர் கூட்டம் சேனலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ் கடவுள் முருகனைப் போற்றும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களைக் கண்டித்து வீடுகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்து மதச் சடங்குகளைக் கேலி கிண்டல் செய்தல், தரக் குறைவாகப் பேசுதல் போன்ற பாதக செயல்களைச் சுரேந்திரன் நடராஜன் என்பவர் வீடியோ பதிவாக கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டு வருகிறார்.

பல கோடி மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி தமிழகத்தில் பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்குக்கும் ஊறுவிளைவிக்கும் சுரேந்திரன் நடராஜனின் செயல்பாடுகளின் பின்னணியில் சமூக விரோத, தேச விரோத அரசியல் கட்சிகள் செயல்படுகிறார்களா என்ற எண்ணம் அமைதியை விரும்பும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே சுரேந்திரன் நடராஜனைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி பாஜக நிர்வாகிகள் அனைவரும் அவரவர் வீடுகளில் இன்று முருகப்பெருமாள் படத்துடனும், கொடியுடனும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்படி பாஜக நிர்வாகிகள் இன்று தங்களது வீடுகளின் முன்பு முருக பெருமாள் படத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேட்டில் உள்ள எல்.முருகன் இல்லத்தின் முன்பும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

**அனைத்து காணொளியையும் நீக்க வேண்டும்**

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், “முருகக் கடவுள் குறித்து இழிவாகச் சித்தரித்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும். இந்த சேனலுக்கு பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்று விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடவுளை அவமதித்தவர்கள் மீது தேச பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அந்த சேனலில் உள்ள அனைத்து காணொளியையும் நீக்க வேண்டும்.

இவ்விவகாரத்தில் காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதில் தொடர்புடைய முக்கியமான நபரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே பாஜகவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கந்த சஷ்டி கவசம் குறித்து வீடியோ வெளியிட்டதாக வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

அதுபோன்று கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி சுரேந்திரன் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனிடையே கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வெளியிடப்பட்ட வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கி கறுப்பர் கூட்டம் சேனல் மன்னிப்பு கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share