qஅரசியல்: அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய கமல்

Published On:

| By Balaji

தான் போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 65ஆவது பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 7) கொண்டாடப்பட்டது. அவருடைய தந்தையும் விடுதலை போராட்ட வீரருமான சீனிவாசன் மறைந்ததும் இந்த தினத்தில்தான். இதனை முன்னிட்டு கமல்ஹாசன் பிறந்தநாள் விழா, அவரது தந்தை சீனிவாசன் சிலை திறப்பு நிகழ்வு, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் திறன்வளர் மேம்பாட்டு மையம் திறக்கும் நிகழ்வு ஆகியவை இன்று கமல்ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடியில் நடைபெற்றது.

முதலில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த கமல்ஹாசன், அதன்பின்னர் தந்தை சீனிவாசனின் சிலை, பயிற்சி மையம் ஆகியவற்றை திறந்துவைத்தார். விழாவில் அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவராகப் பேசினர்.

இதனைத் தொடர்ந்து இறுதியாக உரையாற்றிய கமல்ஹாசன், “நான் அரசியலுக்கு வருவதை எனது குடும்பத்தில் யாரும் விரும்பவில்லை. ஆனால் அப்பாதான் நாங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று முன்பே பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், பேச்சை மாற்றி அதனை நாங்கள் உதாசீனப்படுத்திவிடுவோம். அதுவும் இன்று நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

சுதந்திர போராட்டத்தில் நீங்கள் பங்கேற்றீர்கள் என்பதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவேண்டுமா என எனது அப்பாவிடம் கேட்டுள்ளேன். அப்படி ஒரு சுதந்திர போராட்டம் மீண்டும் வந்தால்? என்று அவர் திரும்பிக் கேட்டார். கிட்டத்தட்ட அந்த நிலையில் இன்று வந்துள்ளது. அதனால்தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என்பது பலருக்கும் தெரியும்” என்று தெரிவித்தார்.

திறன்வளர் பயிற்சி மையம் குறித்து பேசுகையில், “இந்த திறன்வளர் மையம் என்பது எங்களுடைய குடும்பத்திலிருந்து நாங்கள் கொடுக்கும் அன்புப் பரிசு. இதனை இயலாதவர்களும், வாழ்வின் கடைநிலையில் உள்ளவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது தானம் அல்ல.

இங்கே அனைத்தையும் இலவசமாகக் கொடுத்து நம்மை கெடுத்து விடுகிறார்கள். கிரைண்டர் கூட இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அதனை குறைந்த விலையில் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ததால் 3 மாதங்களில் பழுதாகிவிடுகிறது. அதனை சரி செய்வதற்கான நபர்களை உருவாக்க இந்த திறன் வேலை வாய்ப்பு மையம் உதவும். இலவசத்தை வாங்காதே என்று சொன்னால் என்னைத் திட்டுவார்கள். அந்த இலவசம் என்பது 3 மாதங்களுக்கு கூட தாங்காது. ஆனால் நாங்கள் ஏற்படுத்தி உள்ள இந்த மையம் வாழ்நாள் முழுவதும் தாங்கும்” என்றும் பேசினார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share