பத்திரிகையாளர்கள்: தடுப்பூசியில் முன்னுரிமை கொடுக்கப்படுமா?

Published On:

| By Balaji

கொரோனா அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்குச் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் போன்று பத்திரிகையாளர்களும், மிகவும், ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து செய்திகளைச் சேகரித்துக் கொடுக்கிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது பத்திரிகையாளர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஒரு சிலர் உயிரிழக்கவும் நேரிட்டது. இந்நிலையில், பத்திரிகையாளர்களையும் முன்கள பணியாளர்கள் பட்டியலில் சேர்த்து, அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், “ நாடு முழுவதும் குறிப்பாகத் தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. ஒரு வருட காலத்தைக் கடந்து கொரோனா நோய்த்தொற்று தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளில் முன்களப் பணியில் – ஊடகத்துறையினர் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் ஈடுபட்டு வருகிறோம். பல நூறு பத்திரிகை – ஊடகவியலாளர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டனர். தற்போதைய சூழலிலும் தொடர்ந்து அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நம் உறவுகளில் சிலரை இந்த நோய்த் தொற்றுக்கு இழக்கவும் செய்தோம்.

சென்னையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, அப்பல்லோ மருத்துவமனை ஒத்துழைப்புடன் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முயற்சி எடுத்தோம். ஊடகவியலாளர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனை இலவசமாகத் தடுப்பூசி போட முன்வந்தும், மத்திய அரசின் தடுப்பூசி மேலாண்மை இணையத்தில் முன்களப் பணியாளர் பட்டியலில் பத்திரிகையாளர்கள் – இல்லாததால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி பத்திரிகையாளர்களை – முன் களப்பணியாளர் பட்டியலில் சேர்த்து, வயது நிபந்தனையின்றி தடுப்பூசி போட வழிவகை செய்ய வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அன்றைய தினமே தமிழக சுகாதாரத்துறைச் செயலரிடம் இதே வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பலரும் தயக்கம் காட்டிய நிலையில் சென்னையில் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பதிவு செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.

இதற்கிடையில் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது. தேர்தல் பணியாளர்கள் என்ற அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வயது நிபந்தனைகள் இன்றி பத்திரிகையாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் 45 வயதுக்குக் குறைவான பத்திரிகையாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியவில்லை. இரவும் பகலுமாக கொரோனா நோய்த்தடுப்பு விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர் பட்டியலில் மத்திய – மாநில அரசுகள் இதுவரை சேர்க்காததே இதற்கு அடிப்படைக் காரணம்.

எனவே, மத்திய அரசு தாமதிக்காமல் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் ஆபத்து அதிகமுள்ள பத்திரிகையாளர்களுக்கு, எவ்வித நிபந்தனைகளும் இன்றி கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share