ஜே.என்.யு.வை தாக்கினோம், இன்னும் தாக்குவோம்!- இந்து அமைப்பு வாக்குமூலம்!

public

நாட்டையே உலுக்கிய டெல்லி ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக் கழகத் தாக்குதலுக்கு, ‘ஹிந்து ரக்‌ஷா தள்’ என்ற வலது சாரி அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.

ஜனவரி 5 ஆம் தேதி ஞாயிறு மாலை ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக் கழகத்துக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து மாணவர்களை இரும்பு ராடுகள், கடுமையான தடிகளால் கடுமையாகத் தாக்கினார்கள்.

இந்த சம்பவத்துக்கு இடது சாரி மாணவர் அமைப்புகள்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டிய நிலையில், பல்கலைக் கழக மாணவர் சங்கமும், ஆசிரியர்கள் சங்கமும், “பல்கலை நிர்வாகமும் மர்ம குண்டர்களும் சேர்ந்தே மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்”என்று குற்றம் சாட்டினார்கள். அதிலும் ஒருபடி மேலேபோய், ‘இந்தத் தாக்குதல் துணைவேந்தருக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. எனவே துணைவேந்தரை நீக்க வேண்டும்” என்று குடியரசுத் தலைவருக்கே கடிதம் எழுதினார்கள்.

தாக்குதல் நடந்து 24 மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்ட நிலையிலும் டெல்லி போலீசார் மர்ம நபர்களை பிடிக்காமல் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில்தான், ‘தாக்குதலுக்கு நாங்களே பொறுப்பு’ என்று அறிவித்துள்ளது ஹிந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பு.

பிங்கி சௌத்ரி என்று பிரபலமாக அழைக்கப்படும் டோமர், இந்த தாக்குதலுக்கு அவரும் அவரது வலதுசாரி அமைப்பும் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் தேச விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அவர்கள் நம் நாட்டில் வாழ்கிறார்கள், இங்கே சாப்பிடுகிறார்கள், கல்வியைப் பெறுகிறார்கள், ஆனால் பாரதத்துக்கு எதிரான தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இதை நம்மால் சகித்துக் கொள்ள முடியாது. அதனால் நமது ஹிந்து ரக்‌ஷ தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் அந்தத் தாக்குதலை நடத்தினோம். பாரத மாதாவுக்காக இந்தத் தாக்குதல் என்ன உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். எதிர்காலத்தில் மற்றவர்கள் இதேபோன்ற தேச விரோத செயல்களில் ஈடுபட்டால், நாங்கள் மீண்டும் அந்த பல்கலைக்கழகங்களில் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இதுபோன்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவோம்”

என்று கூறியிருக்கிறார் பிங்கி சௌத்ரி.

தாக்குதலில் ஈடுபட்டது பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபிதான் என்று ஜேஎன்யூ மாணவர் அமைப்பினர் உறுதியாகக் குற்றம் சாட்டியிருந்தனர். ஜேஎன்யு மாணவர் அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஜேஎன்யுவின் ஏவிபிவி அமைப்பினரே, உங்களது பல்கலைக் கழகத்தை, உங்களது சக மாணவர்களை, பேராசிரியர்களை நீங்களே தாக்குகிறீர்கள். ஏபிவிபி பயங்கரவாதிகளை வளாகத்திற்கு உள்ளே நுழைய ஊக்குவிப்பதன் மூலம், மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளை தனிமைப்படுத்த அவர்களுக்கு நீங்கள் உதவுவதன் மூலம் உங்கள் கருத்தியல் முன்னோடிகளைப் போல நீங்கள் பயங்கரவாதிகளாக இயங்கியுள்ளீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்து ரக்‌ஷா தளத் தலைவர் பிங்கி சவுத்ரி கூறிய கூற்றுக்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. டெல்லி காவல்துறையினர் வன்முறையை அறிந்திருப்பதாகவும், முகமூடி அணிந்த ஆண்கள் மற்றும் பெண்களை அடையாளம் காணும் பொருட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியை போலீசார் எடுத்து வருவதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஹிந்து ரக்‌ஷா தளம் என்ற இந்த அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கெய்சாபாத் அருகே உள்ள கௌஷாம்பியில் அமைந்துள்ள ஆம் ஆத்மி அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக இதே பிங்கிச் சௌத்ரி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் வந்துவிட்டார். காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அப்போது ஆம் ஆத்மியில் இருந்த பிரசாந்த் பூஷன் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடத்தியது வலது சாரி தீவிரவாத அமைப்பு என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *