இந்தியன் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் திரைப்படம் ‘இந்தியன் -2’. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வந்தது. தற்போது சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அடுத்தகட்ட படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வார இறுதி நாட்களில் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதால் பிற நாட்களை இந்தியன் 2விற்காக ஒதுக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் சிபிஐ அதிகாரி வேடத்தில் விவேக் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் நடித்து வரும் விவேக், முதன்முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடிக்க இருப்பதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
படப்பிடிப்புத் தளம் போன்ற அமைப்பில் இயக்குநர் ஷங்கருடன் அனில் கபூர் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் அனில் கபூரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் இந்தியன் 2 வில் நடிப்பது நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த தகவல் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இயக்குநர் ஷங்கருடன் அனில் கபூர் இருக்கும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.�,”