ஐஏஎஸ் அதிகாரிகளைப் பற்றி நாம் கேட்கும் ஒவ்வொரு முறையும், ஆடம்பரமான கார்கள் மற்றும் எங்கு சென்றாலும் அவர்களைப் பாதுகாப்புப் பணியாளர்கள் பின்தொடர்வதைப் பற்றிதான் அறிந்திருப்போம். ஆனால் மேகாலாயாவின் வெஸ்ட் கரோ ஹில்ஸின் துணை ஆணையர் ராம் சிங் தனது வீட்டுக்காக வாரம்தோறும் 10 கிலோ மீட்டர் நடந்து சென்று காய்கறிகளை வாங்கி வருகிறார். இதன்மூலம் அவர், ஃபிட் இந்தியா திட்டத்தின் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.
ராம் சிங் இந்தியக் குடிமைப் பணிகளில் ஐ.ஏ.எஸ். தரவரிசை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் ஒவ்வொரு வாரமும், வார இறுதிநாட்களில் 10கிமீ நடந்து சென்று உள்ளூர் மக்களால் விளைவிக்கப்படும் காய்கறிகளை வாங்கி வருகிறார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர மற்றவர்களை ஊக்குவிப்பதும், உள்ளூர் உழவர் சமூகத்தை ஆதரிக்கும் வகையிலும் அவர் இவ்வாறு செய்து வருகிறார்.
மக்கள் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்து கொள்ளவும், உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்துவதற்காகவும், ‘பிட் இந்தியா’ திட்டத்தை அன்மையில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ஆனால் இந்த நவீன உலகில் எத்தனை பேர் நமது உடல் ஆரோக்கியத்திற்காக உடற் பயிற்சி மற்றும் நடை பயிற்சி மேற்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.
இந்நிலையில் ஃபிட் இந்தியா திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வெஸ்ட் கரோ ஹில்ஸின் துணை ஆணையர் ராம் சிங் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. அனைத்து மக்களும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். இதன்மூலம் 10கிமீ நடந்து சென்று காய்கறி பழங்களை வாங்குவது மட்டுமின்றி அதனை எடுத்து வர பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாமல், மூங்கில் கூடையைப் பயன்படுத்தி வருகிறார். வாரம் முழுமைக்கும் தேவையான காய்கறிகள், மற்றும் பழங்களை வாங்க தாராளமாக இடமிருக்கும் என்பதால் அந்த கூடையை ராம்சிங் முதுகில் மாட்டிக் கொண்டு மனைவி, குழந்தையுடன் நடந்து சென்று வருவது அங்குள்ள மக்களுக்கு ஆச்சரியமளித்து வருகிறது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பிளாஸ்டிக் இல்லை, வாகன மாசுபாடு இல்லை, போக்குவரத்து நெரிசல் இல்லை, ஃபிட் இந்தியா, ஃபிட் மேகாலயா” என்று குறிப்பிட்டு தனது மனைவியுடன் நடந்து செல்லும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நடந்தே செல்வதால் சுற்றுச் சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடிவதோடு, மூங்கில் கூடை மூலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டையும் ஒழிக்க முடிகிறது. எனவே இது என் உடலுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சூழல் சார்ந்த பாதுகாப்பு முன்னெடுப்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது. நான் மூங்கில் கூடையைப் பயன்படுத்தச் சொன்ன போது, இவ்வளவு காய்கறிகளைச் சுமந்து செல்வது கடினம் கூறி சிரித்தார்கள். ஆனால் நானும் எனது மனைவியும் இதுபோன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டோம்” என்றார்.
தற்போது இவரது முயற்சிக்கு நாடு முழுவதும் பாராட்டுகளும், வாழ்த்து மழைகளும் குவிந்து வருகின்றன.
�,”