அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில் இடம் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு சுகாதாரத் துறை செயலாளர் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அடிப்படையில் இடம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக கத்தோலிக்க கல்விக் கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், தமிழகம் முழுவதும் எங்கள் கழகம் சார்பில் 2400 அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அரசுப் பள்ளிகளுக்கான சலுகைகள், கொள்கைகள், பாடத்திட்டம், போதிக்கும் முறை, உதவிகள் என அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
எனவே அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டும் உள் ஒதுக்கீடு சலுகை என்பது பாரபட்சமானது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் சமூகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர்களும் படிப்பதாகவும். எனவே அவர்களுக்கும் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில் இடம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் இன்று (டிசம்பர் 8) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாகத் தமிழக சுகாதாரத்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டு ஆணையில் அரசு பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் இந்த உள் ஒதுக்கீட்டில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை இந்த சட்டம் கொண்டுவரப்படும் போதே எழுந்தது. அப்போது, மாநகராட்சி பள்ளிகளை உள்ளடக்கிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, ‘ஏராளமான பணக்கார மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இச்சலுகை வழங்கப்பட்டால் உள் ஒதுக்கீட்டில் அவர்கள் தான் அதிகம் பயன்பெறுவார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகச் சிறிய அளவிலே இடம் கிடைக்கும். 100சதவிகிதம் இந்த சலுகை அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால், அரசு உதவி பெறும் பள்ளிகளை இதில் சேர்க்கக்கூடாது’ என்று முதல்வருடனான ஆலோசனையின் போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உதகையில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றாலும் அது தனியார் பள்ளிகளே என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
*-பிரியா*�,