ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அதானி 8 இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
பிரபல ஃபோர்பஸ் பத்திரிக்கை, 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை நேற்று(அக்டோபர் 11) வெளியிட்டது. இதில், இந்திய அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 51. 4 பில்லியன் டாலராகும். இது இந்திய ரூபாய் மதிப்பில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஆகும்.
**அம்பானிக்கு கைகொடுத்த ஜியோ**
முகேஷ் அம்பானியின் ‘ஜியோ’ எனும் 3 வயது செல்லப் பிள்ளையின் வெற்றிக்குப் பின்னணியில், அம்பானி தனது நிகர மதிப்பில் 14.1 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளார். ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்கார பட்டியலில் 62 வயதான முகேஷ் அம்பானி தொடர்ந்து 12வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
**அதானிக்கு கைகொடுத்த மோடி**
ஃபோர்ப்ஸ் 100 பணக்கார இந்தியர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கெளதம் அதானி 15.7 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இருக்கிறார். சென்றாண்டு பத்தாவது இடத்திலிருந்த அதானி, இந்தாண்டு இரண்டாவது இடத்தை பிடிக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த, அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் என்பதையும் தாண்டி, கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்திலும், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களிலும் இதன் பங்கு முக்கியமானதாக மாறிவருகின்றது. குஜராத் மாநிலத்தின் முதல்வராக மோடி பதவியேற்றவுடன் தொழிலதிபர் அதானியின் வளர்ச்சி தொடங்கியது. ஒரே மாநிலத்தைச் சேர்ந்த மோடியும், அதானியும் நெருங்கிய நண்பர்களாகவும் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட அதானி குழுமம் வளங்கள் (நிலக்கரி சுரங்க மற்றும் வர்த்தகம்), தளவாடங்கள் (துறைமுகங்கள், தளவாடங்கள், கப்பல் மற்றும் ரயில்), ஆற்றல் (புதுப்பிக்கத்தக்க மற்றும் வெப்ப மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம்), வேளாண் (பொருட்கள், சமையல் எண்ணெய், உணவு பொருட்கள், குளிர் சேமிப்பு மற்றும் தானிய குழிகள்), ரியல் எஸ்டேட், பொது போக்குவரத்து உள்கட்டமைப்பு, நுகர்வோர் நிதி மற்றும் பாதுகாப்பு துறைகள் ஆகிய முக்கியமான துறைகளில் கோலோச்சுகின்றன.
மோடி மாநில முதல்வராக இருந்த போது, 2003ஆம் ஆண்டு சமயத்தில், மோடி அரசு குஜராத் கட்ச் வளைகுடாவில் துறைமுகம் கட்டுவதற்காக அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியது . ஏறத்தாழ 14 ஆயிரம் ஏக்கர் நிலம் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஒரு சதுர மீட்டர் நிலத்திற்கு 1 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்பட்டு நிலம் அளிக்கப்பட்டது அப்போது சர்ச்சையானது. அதன் பின்னர், மோடி பிரதமரானதும் ஒடிஷாவிலுள்ள தம்ரா துறைமுகம் கட்டமைக்க அனுமதியளிக்கப்பட்டது. இது மட்டுமின்றி அதானி, பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களில் தொடர்ந்து மோடிக்கு துணையாக பயணிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி செல்லும் எல்லா இடங்களிலும், அதானி செல்வது உறுதி எனும் அளவில் அவர்களது நட்பு இருக்கிறது. இதனால், வெளிநாட்டு முதலீடுகளிலும் அதானியின் குழுமம் சமீப வருடங்களில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இவையணைத்தும், அம்பானிக்கு அடுத்த இடத்தை 57 வயதான அதானிக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது.
**அதிர்ச்சியளித்த அசிம் பிரேம்ஜி**
அசோக் லேலண்ட் உரிமையாளர்கள் இந்துஜா சகோதரர்கள் 1,10,800 கோடி ரூபாய் சொத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். ஷபூர்ஜி குழுமத்தின் பலோன்ஜி மிஸ்திரி 1,06,500 கோடி ரூபாய் சொத்துடன் நான்காவது இடத்தையும், கோட்டக் மஹிந்திரா வங்கியின் உதய் கோட்டக் 1,05,100 கோடி ரூபாய் சொத்துகளுடன் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளனர். கடந்த வருடம், இரண்டாவது இடத்திலிருந்த அசிம் பிரேம்ஜி இவ்வருடம் 17ஆவது இடத்திற்கு சரிந்து அதிர்ச்சியளித்தார்.
�,