தமிழகத்தில் 100 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள்: அதிர்ச்சித் தகவல்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் கள்ள நோட்டுகள் அதிகமாக புழங்க ஆரம்பித்திருப்பதாகவும், அதை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் வணிகர்கள் மத்தியில் வருத்தக்குரல்கள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து வணிகர் பிரமுகர்கள் சிலரிடம் பேசியபோது, “ தமிழகத்தில் கள்ளநோட்டுகளைத் தாராளமாக புழக்கத்தில் விட்டுவருகிறது ஒரு கும்பல். ஒரு லட்சம் நல்ல நோட்டுகள் கொடுத்தால், மூன்று லட்சம் கள்ளநோட்டுகள் கொடுப்போம் என்று தமிழகம் முழுவதும் ஆட்களைப் பிடித்து, கள்ளநோட்டுகளை இறக்கி வருகிறார்கள். இந்த கும்பலில் பலர் கேரளா இளைஞர்கள்.

இதனை மோப்பம் பிடித்த போலீஸார்கள் பலர், இந்த வழக்கை தோண்டினால், தேவையில்லாமல் பிரச்சனைகள் வந்துசேரும், கள்ள நோட்டுகளைப் பரிசோதனைகள் செய்ய நாசிக் போகவேண்டும் என்ற காரணத்துக்காகவே பல இடங்களில் கண்டுகொள்ளாமல் போகிறார்கள் காவல்துறை அதிகாரிகள்” என்கிறார்கள்.

ஆனால் போலீஸ் வட்டாரத்தில் இதை மறுக்கிறார்கள். “தேனி மாவட்டத்தில் புழங்கிவரும் கள்ளநோட்டுகள் பற்றி, தமிழகக் காவல்துறை அதிகாரிக்குத் தெரிந்து அவரது உத்தரவின்படி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜெய் ஜோ, தமிழகத்தைச் சேர்ந்த கோம்பை சண்முகராஜா இருவரையும் கடந்த 24ஆம் தேதி, வழக்கு பதிவுசெய்து கைதுசெய்துள்ளனர் போடி காவல்துறையினர். கள்ளநோட்டுகளை சப்ளை செய்பவனும், பிரின்டிங் மிஷின் வைத்திருப்பவனும் கேரளாவில் இருப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைக்க அங்கே சென்ற தமிழக போலீஸுக்கு, கேரளா போலீஸார் ஒத்துழைக்கவில்லை.

இந்த கள்ள நோட்டு கும்பல் 500 ரூபாய் கள்ள நோட்டுகளைத் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் சப்ளை செய்துவருகிறார்கள். அதிகமாகத் தமிழகத்தில்தான் கள்ளநோட்டுகள் புழங்கிவருவதாகச் சொல்கிறார்கள். நல்ல நோட்டும், கள்ள நோட்டும் ஒப்பிட்டுப் பார்த்தால் எது கள்ளநோட்டு என்று கண்டுபிடிக்கமுடியாது அந்த அளவுக்குத் தொழில் நுட்பத்துடன் அச்சடிக்கிறார்கள். கேரளா மாநிலத்தில் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி போன்ற இடங்களில் கள்ளநோட்டு விநியோகம் செய்யக்கூடிய கும்பல் மையம் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் தமிழக போலீஸுக்கு கேரளா போலீஸுக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், பல கள்ள நோட்டு கும்பலை பிடிக்க முடியாமல் போகிறது. காவல்துறை மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக டிஜிபி கேரள டிஜிபியிடம் பேசினால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்” என்கிறார்கள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share