tயானைகள் புத்திசாலியான விலங்கு: நீதிமன்றம்!

Published On:

| By Balaji

வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகளின்படிதான் கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறா? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கும், வனத்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளை பராமரிப்பது குறித்தும், பாகன்களை நியமிக்க வேண்டியும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

கடந்த முறை நடந்த விசாரணையின்போது, தமிழகத்தில் தனியார் மற்றும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாக பராமரிக்கப்படும் வகையில், புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுப்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று(ஏப்ரல் 27)மீண்டும் இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது, தமிழ்நாடு வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படும் வகையில் புதிய கொள்கை வகுப்பது தொடர்பாக யானைகள் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அலுவலர்களுடன் கடந்த 23ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

யானைகள் மனிதாபிமானத்துடன், கண்ணியமான முறையில் நடத்தப்பட வேண்டும். யானைகளை எந்த காரணத்தைக் கொண்டும் துன்புறுத்தக் கூடாது. யானைகள் புத்திசாலியான விலங்கு மட்டுமில்லாமல், அவற்றின் உள்ளுணர்வு மனிதர்களுக்கு கிடையாது. தனியார் மற்றும் கோயில்களில் உள்ள வளர்ப்பு யானைகளை பராமரிப்பது தொடர்பான கொள்கையை வகுத்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகள் படி, கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறையும், வனத்துறையும் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மாநில அரசு தேர்தல் காய்ச்சலில் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share