2 வாரத்துக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: மருத்துவர்கள் பரிந்துரை!

public

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க மருத்துவர்கள் குழு முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 843 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை காணொலிக்காட்சி மூலம் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதில், ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், கொரோனா வேகமாகப் பரவுவதைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர்கள் குழு, “இந்த இரண்டு மணி நேரத்தில் 17 மருத்துவர்கள் அவர்களது கருத்தைத் தெரிவித்தனர். உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக இருக்கும் சவுமியா சாமிநாதனும் கலந்து கொண்டு அவரது கருத்தைத் தெரிவித்தார்.

தற்போது வரை தமிழக அரசு எடுத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக இருக்கிறது. தமிழகத்தில் பொதுச் சுகாதார கட்டமைப்பு வலுவாக இருக்கிறது. மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள் குறித்து விவாதித்தோம். நோயாளிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட போதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தோம். இந்த 14 நாட்களில் நோயாளிகளிடம் நிறையச் சோதனை செய்ய வேண்டும். அதன்பிறகே ஒரு முடிவெடுக்க முடியும்” என்று தெரிவித்தனர்.

மருத்துவர்களுடனான ஆலோசனை முடிவடைந்துள்ள நிலையில், நாளை மாலை 5 மணிக்குத் தமிழக அமைச்சரவை கூட உள்ளது. இதிலும் அமைச்சர்களுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அதன் பிறகு முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, ஒடிசாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *