அதிகாரிகள் அரசு வழங்கும் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது, பிச்சை எடுப்பதற்குச் சமம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதல் பாதிப்பு தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், விவசாயிகள் விளைவிக்கும் நெல் கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நெல் அதிகமாக விளையும் டெல்டா பகுதிகளில், இதனை விற்க விவசாயிகள் 10, 15 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் நெல் சேதமடைகின்றது.
எனவே விவசாயிகளைக் காப்பாற்றத் தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கவும் விவசாயிகளிடமிருந்து விரைவில் நெல் கொள்முதல் செய்ய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் இன்று (அக்டோபர் 15) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்க முடியாமல் ஒருபக்கம் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மற்றொரு பக்கம் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடமிருந்து அதிகாரிகள் லஞ்சம் வாங்குகின்றனர். இது மிகவும் வேதனையானது. அதிகாரிகள் தங்களின் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது என்பது பிச்சை எடுப்பதற்குச் சமமானது” என்று காட்டமாகத் தெரிவித்தனர்.
விவசாயிகள் கொண்டுவரும் ஒரு நெல் முளைத்து அது வீணாகினால், அதற்குக் காரணமான அதிகாரிகளிடம் உரியப் பணத்தை வசூலிக்க வேண்டும். அப்போதுதான் நெல் கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்று தெரிவித்த நீதிபதிகள் தற்போது மழைக் காலம் என்பதால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களிடம் இருந்து விரைவில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் அவை முளைத்து விடுவதாகக் கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதைக் காணமுடிகிறது. எனவே தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன, கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்
மேலும் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
**-பிரியா**�,