மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஜூன் 24ஆம் தேதி நடைபெற்றது. அதில், மாநிலங்களில் உள்ள 1,540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கூட்டுறவு வங்கியில் நடைபெறும் முறைகேடுகளைக் களைய முடியும் என்றும், வைப்புத் தொகையாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதை எதிர்த்து காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி, வேலூர் கூட்டுறவு நகர்புற வங்கி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், “கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை மாநில அரசின் தொடர்பில் இருப்பது. ஆகவே, அரசியலமைப்பின்படி கூட்டுறவு வங்கிகள் குறித்து நாடாளுமன்றத்துக்குச் சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று (ஜூலை 20) காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, “கூட்டுறவு சங்கங்களின் உரிமைகளில் இந்த அவசர சட்டம் தலையிடுவதாக இருந்தால் மட்டுமே இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும். மத்திய அரசின் அவசர சட்டத்தால் உடனடி தாக்கம் எதுவும் இல்லை” என்று கூறி தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இதுதொடர்பாக மத்திய அரசு, ரிசர்வ் வங்கி நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அவசர சட்டம் கூட்டுறவு சங்கங்களின் உரிமைகளில் தலையிடுவது போல இருந்தால் அதைக் கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்றும் குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
**எழில்**�,