ரயில் முன் பாய்ந்து குழந்தைகளுடன் பெண் தற்கொலை!

Published On:

| By Balaji

ஆவடியில் ரயில் முன் பாய்ந்து தனது குழந்தைகளுடன் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே உள்ள சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (24). இவர்களுக்குக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. காதல் திருமணம் என கூறப்படுகிறது.

இந்த தம்பதியினருக்கு 2 வயதில் கவியரசன், 2 மாதத்தில் நிஸ்வந்த என இரு குழந்தைகள் இருந்தனர். முத்துமாரிக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே நீண்ட நாட்களாகப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு குழந்தைகளுடன் விஜயலட்சுமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் அவரது கணவர் தேடியுள்ளார். மூவரையும் காணாததால் ஆவடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 18) காலை விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன், ஆவடி இந்து கல்லூரி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பின்னர் தண்டவாளத்தில் கிடந்த குழந்தைகள் மற்றும் விஜயலட்சுமியின் உடலை மீட்டு ரயில்வே போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆவடி போலீசார், விஜயலட்சுமி கணவர் முத்துமாரியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னை மார்க்கமாகச் செல்லும் விரைவு ரயில் மற்றும் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, கணவர் மனைவிக்கு இடையேயான பிரச்சினையில் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share