விடைத்தாள் திருத்தும் மையங்கள் அதிகரிப்பு: சென்னையில் இல்லை!

Published On:

| By Balaji

2019-2020ஆம் கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் 67லிருந்து 202ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 24ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைந்தது. வழக்கமாக இச்சமயத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக, விடைத்தாள் திருத்துவது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாளை விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க இருக்கும் நிலையில் பள்ளிக் கல்வித் துறை சில வழிமுறைகளை ஆசிரியர்கள் பின்பற்றுமாறு தெரிவித்துள்ளது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகவும் விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 202ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் நாளை முதல்கட்டமாக 10,746 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவர். சுமார் 48 லட்சம் விடைத்தாள் திருத்தம் செய்யப்படவுள்ளன.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கு விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படமாட்டாது. அங்கு திருத்தப்படவுள்ள விடைத்தாள்கள் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். ஆசிரியர்கள் சமூக இடைவெளி விட்டு விடைத்தால் திருத்தம் பணியை மேற்கொள்ள மேண்டும். கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மறுமுறை பயன்படுத்தக் கூடிய 3 முகக் கவசங்கள் வழங்கப்படும்.காலை 9 மணிக்கு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்கள் காலை மாலை தலா 15 திருத்தம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share