Nகோடையைச் சமாளிக்குமா சென்னை?

Published On:

| By Balaji

தமிழகத்துக்கு வழக்கமாக இந்த ஆண்டு தர வேண்டிய தண்ணீரை ஆந்திர அரசு நிறுத்தியுள்ளதால், கொளுத்தும் கோடையில் ஏற்படும் தண்ணீர் பிரச்சினையைச் சென்னை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆந்திரா – தமிழக ஒப்பந்தத்தின்படி ஆந்திராவின் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தெலுங்கு – கங்கை திட்டத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்கு 12,000 மில்லியன் கன அடி கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு வழங்கி வருகிறது.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜூலை – அக்டோபர் வரையில் 8 டி.எம்.சி நீரும், ஜனவரி – ஏப்ரல் வரை 4 டி.எம்.சி நீரும் ஆந்திரா தமிழகத்துக்கு வழங்க வேண்டும். கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்குத் திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீர், தமிழகத்தின் எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டை அடைந்து அங்கிருந்து 25 கிலோமீட்டர் கால்வாய் வழியாகப் பயணித்து பூண்டி ஏரிக்கு வருகிறது.

பூண்டி ஏரியில் தேக்கி வைக்கப்படும் கிருஷ்ணா நீரானது, கோடைக் காலங்களில் சென்னைக்கும், நீர் இருப்பு குறைவாக இருக்கும் மற்ற ஏரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திராவில், சில நேரங்களில் கண்டலேறு அணையின் இருப்பு மிகவும் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஆந்திர அரசு தமிழகத்துக்குக் கிருஷ்ணா நீரைத் திறந்து விடாது. அந்த வகையில், ஒப்பந்தப்படி நடப்பாண்டு கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய முதல் தவணை கிருஷ்ணா நீரை வழங்கவில்லை.

ஆனால், ஆந்திராவில் தென்மேற்குப் பருவமழையால் கண்டலேறு அணை நீர் இருப்பு கணிசமாக உயர்ந்ததால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.

அணையிலிருந்து தொடக்கத்தில் கிருஷ்ணா நீர் விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தமிழக எல்லையான ஜீரோ பாய்ன்ட்டுக்கு வந்தது. கிட்டத்தட்ட 7 மாதங்கள் தொடர்ந்து அணையிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்கி வந்த ஆந்திர அரசு, கடந்த 19ஆம் தேதி முதல் விநாடிக்கு 175 கன அடியாகத் தண்ணீரைக் குறைத்தது.

அதைத் தொடர்ந்து, கடந்த 20ஆம் தேதி மாலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டைக்கு விநாடிக்கு வெறும் 20 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. இந்த நிலையில், 21ஆம் தேதி காலை 6 மணியளவில் கண்டலேறு அணையிலிருந்து நீர் திறந்துவிடுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 21ஆம் தேதி வரை தமிழகத்துக்கு மொத்தம் 7.65 டிஎம்சி கிருஷ்ணா நீர் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் “கிருஷ்ணா நீராலும், நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும், பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவான 35 அடியில் தற்போது 28.2 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உள்ளது. அதே போல், சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கண்ணன் கோட்டை – தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் ஆகியவற்றில் சுமார் 8,618 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதால், சென்னைக்கு இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு என்பது துளியும் இருக்காது” என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share