முதுகுளத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கமளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுக்குளத்தூர் அருகே நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன். இவர் போலீஸாரின் வாகனச் சோதனையின்போது நிற்காமல் சென்றதற்காக கடந்த டிசம்பர் 4ஆம் தேதி கீழத்தூவல் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்கு பின்பு அவரின் பெற்றோரை வரவழைத்து மணிகண்டனை போலீஸார் அனுப்பி வைத்தனர். அன்று நள்ளிரவில் உடல்நலக்குறைவு காரணமாக மணிகண்டன் மர்ம முறையில் உயிரிழந்தார்.
போலீஸாரின் தாக்குதலால்தான் மணிகண்டன் உயிரிழந்தார் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரியும் அவரின் சகோதரர் அலெக்ஸ் பாண்டியன் போலீஸில் புகார் அளித்தார். அதுபோன்று இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், மணிகண்டனின் பெற்றோரின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த காவல் துறை, மணிகண்டனை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த சிசிடிவி காட்சியையும் வெளியிட்டது.
இதை எல்லாத்தையும் ஏற்க மறுத்த மணிகண்டனின் தாயார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். மணிகண்டனின் உடலை மறுகூராய்வு செய்ய வேண்டும். அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, அவரின் உடல் மீண்டும் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதையடுத்து மணிகண்டனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மணிகண்டனின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக் கண்ணன் விளக்கமளித்துள்ளார்.
மதுரையில் நேற்று (டிசம்பர் 14) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”மாணவர் மணிகண்டனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது, அவரிடம் விசாரணை நடத்தியது, அவரின் பெற்றோரை வரவழைத்து விசாரித்துவிட்டு, மணிகண்டனை நல்லமுறையில் அனுப்பி வைத்தது அனைத்தும் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அன்று நள்ளிரவே மணிகண்டன் உயிரிழந்து விடுகிறார். அவரின் உயிரிழப்புக்கு காவல்துறைதான் காரணம் என்று அவரது சகோதரர் அலெக்ஸ் பாண்டியன் புகார் அளித்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 8ஆம் தேதி மணிகண்டனின் உடல் மறு கூராய்வு செய்யப்பட்டது. உடல் உறுப்பு பரிசோதனையின் இறுதி அறிக்கை நேற்று முன்தினம் வந்தது. அதில், மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார் என்பது தெளிவாக உள்ளது. காவல்துறையினர் தாக்கியோ, அடித்தோ மணிகண்டன் உயிரிழக்கவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. அதனால் அவரது மரணம் குறித்து இனி சமூகவலை தளங்களில் தவறான கருத்துகளைப் பகிரக் கூடாது.
மணிகண்டன் வீட்டிலிருந்து விஷப் பாட்டில் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. எதனால் விஷம் அருந்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். மரணம் தொடர்பாக ஆர்டிஒ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
**-வினிதா**
�,