கடந்த 2020ஆம் ஆண்டு, மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டபோது அமைப்புசாரா துறைகளில் இருந்தவர்களில் 10 கோடி பேர் வேலையை இழந்த நிலையில், 2021இல் மட்டும் இதுவரை 2.53 கோடி பேர் வேலையிழந்துள்ளனர் என்று இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் (The Centre for Monitoring Indian Economy (CMIE) அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையால், இந்தியாவின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் (சிஎம்ஐஇ – CMIE) அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையால் நாட்டில் 97 சதவிகிதம் குடும்பங்கள் பொருளாதாரப் பிரச்சினைகளைச் சந்தித்துள்ளதாகவும், கடந்த ஏப்ரல் மாதம் வேலையின்மை விகிதம் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், இது மே மாதத்தில் 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு, மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சில வாரங்களிலே, அமைப்புசாரா துறைகளில் இருந்தவர்களில் 10 கோடி பேர் வேலையை இழந்தனர். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முடங்கின. நாடு பொருளாதார ரீதியாக பெரும் தடுமாற்றத்துக்கு உள்ளானது.
அதன் விளைவாகவே, இரண்டாவது அலையை எதிர்கொள்வது குறித்த அறிவிப்பில், பிரதமர் மோடி நாடு தழுவிய முழு ஊரடங்கை கடைசி வாய்ப்பாகவே பயன்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது, முதல் அலையைவிட, இரண்டாம் அலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் அதிகரித்தபடியே உள்ளது.
தொழில்கள் முடங்கிடாத வகையில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடந்த மே மாதத்தில் மட்டும் நாடெங்கிலும் 1.5 கோடி பேருக்கு மேல் வேலையை இழந்திருப்பதாக சிஎம்ஐஇ அமைப்பு தெரிவிக்கிறது.
இந்தியாவில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 40.07 கோடி பேர் வேலையில் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை மே மாத இறுதியில் 37.55 கோடியாகக் குறைந்துள்ளது.
இது ஒருபக்கம் இருக்க, புதிய வேலைவாய்ப்பு குறித்த நிலவரமும் மோசமாகவே உள்ளது. சுற்றுலாத் துறையில் புதிதாக ஆள் எடுப்பு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் குறைந்துள்ளது. கல்வி, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் 20 – 30 சதவிகிதம் குறைவாகவும் தொலைத் தொடர்புத்துறை, வங்கிகள் சார்ந்த வேலைகளில் 10 – 20 சதவிகிதம் வரையிலும் வேலைவாய்ப்புகள் குறைவாகவும் உள்ளன.
சென்ற ஆண்டு முதல் அலையின்போது வேலையிழந்தவர்களில் பலர் இன்னும் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற முடியாமல் திணறி வருகின்றனர். இந்தச் சூழலில், கொரோனா இரண்டாம் அலையில் ஏற்படத் தொடங்கியிருக்கும் வேலையிழப்பும், நிறுவனங்கள் புதிதாக ஆட்கள் எடுப்பதைக் குறைத்து வருவதும் நிலைமை இன்னும் மோசமாக்கும். இந்தத் தகவல்கள் பணியாளர்களிடமும் புதிதாக வேலை தேடுபவர்களிடமும் கடும் அதிர்ச்சியை உருவாக்கும் என்றே இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
**-ராஜ்**
.�,