32.0 வியாபாரப் பயணம் – 2

Published On:

| By Balaji

இராமானுஜம்

ஏன் இந்த அறிவிப்பு?

உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் சினிமா ஆர்வலர்கள், பார்வையாளர்கள் மத்தியில் அக்டோபர் 15 முதல் சர்கார் திரைப்படம் பற்றிய சர்ச்சைகள் மையம் கொண்டிருந்தன. தீபாவளி அன்று(நவம்பர் 6) சர்க்கார் ரிலீஸான சமயம் அதன் திரைக்கதையும், வசூல் சாதனையும் பேசுபொருளாக இருந்தன.

கார்ப்ரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரை ரிசல்ட் தனக்கு சாதகமாக இருக்க வேண்டும். அதற்காக எந்த வழிமுறையையும் கையாளலாம் என்பது அவற்றின் அணுகுமுறை. தங்கள் வசூல் இலக்கை அடைய தனது கார்ப்ரேட் யுக்தியை ஊழியர்கள் மூலம் அமல்படுத்தி சர்கார் படத்தின் வசூலில் சாதனை நிகழ்த்த வைத்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

படத்தின் கதாநாயகன் விஜய் என்றாலும் மக்களை வசீகரிக்கும் சக்தியாக சர்காரை மாற்றியது சன் பிக்சர்ஸின் கார்ப்ரேட் கேம். துப்பாக்கி, கத்தி என இரு படங்களிலும் முருகதாஸ் – விஜய் கூட்டணி இணைந்திருந்தாலும் சர்கார் சாதனை அப்படங்களில் சாத்தியமாகவில்லை. அதே கார்ப்பரேட் கேம் நவம்பர் 29 அன்று 2.0 மூலம் மீண்டும் அரங்கேறவிருக்கிறது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் 2.0 படம் அன்றுதான் ரிலீஸாகிறது.

2018இல் இதுவரை வெளியான படங்களின் தயாரிப்பு செலவு சுமார் ரூ.1000 கோடி. ஆனால், 2.0 படத்தின் தயாரிப்பு செலவு மட்டும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளுக்கும் சேர்த்து 600 கோடி என்கிறது தயாரிப்புத் தரப்பு. இதில் தொலைக்காட்சி உரிமை, ஆடியோ ரைட்ஸ், வெளிநாட்டு விநியோக உரிமை இவற்றின் மூலமாக சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடக்க வாய்ப்பு உள்ளது. எஞ்சிய 400 கோடி ரூபாய் தியேட்டர் வசூல் மூலமாக எடுத்தாக வேண்டும். ரஜினிகாந்த் + அக்‌ஷய் குமார் + ஏ.ஆர்.ரஹ்மான் + ஷங்கர் என்கிற பிரம்மாண்டமான கூட்டணி இணைந்துள்ள படம் என்றாலும், திரையரங்குகள் தரப்பில் இந்த அளவுக்கு வசூல் ஆவது கடினம் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

வட இந்தியாவிலும், ஆந்திரா, தெலங்கனா மாநிலங்களிலும் திரையரங்குகளின் விருப்பப்படி, புதிய படங்களுக்கு முதல் வாரத்தில் மட்டும் டிக்கெட் கட்டணத்தை அதிக விலைக்கு விற்பனை செய்துகொள்ள சட்டபூர்வமாக அரசு அனுமதிக்கிறது. தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் இந்த அனுமதி இல்லை.

ரஜினிகாந்த் நடித்து வெளியான படங்களில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படம் மட்டுமே உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்திய படம். அந்த படத்தின் பட்ஜெட் குறைவு. ரிலீஸான காலத்தில் ரஜினிகாந்த் நடிகராக மட்டுமே தமிழகத்தில் பார்க்கப்பட்டார். கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த பின் எல்லா பொது பிரச்சினைகளுக்கும் கருத்து சொல்லி, பிரச்சினைக்குள்ளாகும் நடிகராக மாறிவிட்ட ‘புதிய’ ரஜினிகாந்த்தின் படம் பார்க்கும் ஆர்வம் வெகுஜன ரசிகர்களிடம் தற்போது குறைந்திருக்கிறது. இந்தச் சூழலில் தனது ரசிகர் மன்றங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை நவம்பர் 17 அன்று வெளியிட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

2.0 படத்திற்காக ரசிகர் மன்றக் காட்சிக்கு என விற்கப்படும் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு” விற்பனை செய்யக் கூடாது என்பதே அது. இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏன் ஏற்பட்டது?

சர்கார் படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது விவாதப் பொருளாகி அந்தச் சூடு தணிந்த நேரத்தில் இப்படியொரு அறிவிப்பு வெளியாகியிருப்பது ரஜினி நியாயமானவர் என்கிற பிம்பத்தை உருவாக்குவதற்காகவா என்கிற சந்தேகத்தை உருவாக்குகிறது.

தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தைப் பேசிவரும் ரஜினிகாந்த் தான் நடித்துள்ள 2.0 படத்திலிருந்து அந்த மாற்றத்தைத் தொடங்கலாமே என்ற கேள்வியும் வேண்டுகோளும் பொதுவெளியில் எழுந்துவிடக் கூடாது என்பதால் இந்த அறிவிப்பா?

**நாளை காலை 7 மணிப் பதிப்பில்…**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share