31 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு!

public

ஜனவரி மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் 31 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை பெய்யும். ஆனால், கடந்த அக்டோபர் 25ஆம் தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை மழை பதிவாகி இருந்தது. இந்தாண்டு சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள அணைகள், ஏரிகள் நிரம்பியது மட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக நீர்வளத் துறையின் அங்கமான மாநில நில மற்றும் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது.

இவ்வாறு ஜனவரி மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்தாண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகம் முழுவதும் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 31 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இந்த 5 மாவட்டங்களில் குறைவான அளவே வித்தியாசம் உள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் நிலத்தடி நீரை பெருக்கும் வகையில், மாநில நிலவள, நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.