வேலூர் ஜோஸ் ஆலுக்காஸில் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் ஐந்து தளங்களுடன் பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று(டிசம்பர் 15) காலை ஊழியர்கள் கடையை திறந்தபோது தரைதளத்தில் உள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் சரக டிஐஜி எ.ஜி.பாபு, எஸ்பி ராஜேஷ் கண்ணன், ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் மோப்ப நாய் சிம்பா மற்றும் கைரேகை நிபுணர் குழுவின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடையில் உள்ள நகைகளை எடைபோடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் 30 கிலோ தங்க நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லாக்கரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வைர நகைகள் திருடு போயிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் பதிவாகதபடி மறைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அதனால், கொள்ளை போன நகைக் கடைக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் தடயங்கள், கைரேகைகள் சேகரிப்பட்டு வருகிறது. கொள்ளை நடந்த கடையின் சுவர் ஓரம் ஒரு தலை விக் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற திசை குறித்து அறிய வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சிம்பா கடையின் பின்புறம் இருந்து கால்வாய் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று வேலூர் பழைய பேருந்து சாலையில் வந்து நின்றது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணன் கூறுகையில், ‘மூன்று டிஎஸ்பி மற்றும் ஒரு ஏஎஸ்பி தலைமையிலான நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களா அல்லது வடநாட்டை சேர்ந்தவர்களா என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும். அங்குள்ள சிசிடிவி கேமராக்களுக்கு கொள்ளையர்கள் ஸ்பிரே அடித்துவிட்டு திருடியுள்ளனர்” என்று கூறினார்.
**-வினிதா**
�,