கல்லூரிகளில் 3 தவணைகளாக கல்வி கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்தச் சொல்லி பள்ளிகள் நிர்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் தரப்புக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த வழக்கில், தமிழக உயர் கல்வித் துறை சார்பில், இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் இன்று (ஜூலை 9) பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை திறப்பது குறித்து இதுவரை முடிவெடுக்காத நிலையில், கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்வியே எழவில்லை. தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து இருப்பு நிதி வைக்கப்படுவது வழக்கு. இதனைப் பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கலாம்.அதனால் கல்லூரி நிர்வாகங்களில் நிதியில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மனுதாரர் தரப்பின் கோரிக்கையை ஏற்று தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் ஆகிய மாதங்களில் கல்விக்கட்டணம் வசூலிக்கலாம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**எழில்**�,