சென்னை மெரினா கடற்கரையில் குளிக்க சென்ற 3 பள்ளி மாணவர்கள் அலையில் அடித்து செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.
கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, ஊரடங்கில் அளிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கவும், இரவு 10 மணிவரை கடைகளை திறந்து வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது.
அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, இன்று(ஆகஸ்ட் 23) மக்கள் ஆர்வமுடன் கடற்கரைகளுக்கு சென்றனர். கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பல நாட்களுக்கு பிறகு, கடற்கரை செல்ல அனுமதி அளித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, இங்கே வந்து உட்கார்ந்து இருப்பது மனதுக்கு அமைதி தருகிறது என்று மக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் பள்ளியில் படிக்கும் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த விமல், பெருமாள், தர்மராஜ், சக்திவேல், சல்மான்கான், ஆகாஷ் ஆகிய ஆறு பேரும் இன்று மதியம் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர்.
அப்போது, விமல்,பெருமாள், தர்மராஜ் ஆகிய மூவரும் நீண்ட நேரமாகியும் கடலிலிருந்து வெளியே வராததால், உடன் வந்தவர்கள் கடலோர காவல்படைக்கு தகவல் அளித்துள்ளனர்.
தற்போது, கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட மூவரையும் கடலோர காவல்படை மற்றும் தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.
கடற்கரைக்கு செல்வதற்கு அனுமதி கொடுத்த முதல் நாளே 3 பேர் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
**-வினிதா**
�,