dவெடி விபத்து : சிறுவன் உள்பட 3 பேர் பலி!

Published On:

| By Balaji

சாத்தூர் அருகே வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி,மார்ச் மாதங்களில் விருதுநகர், சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் தீ விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

தொடர் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு விதிமீறல்கள்தான் காரணம். உரிமம் பெற்ற நபர் சட்ட விரோதமாக மற்ற நபர்களுக்கு பட்டாசு ஆலையை குத்தகைக்கு விடுவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன. பாதுகாப்பின்மை, கவனக்குறைவு, போதிய தொழில் பயிற்சி இல்லாதது போன்ற பல்வேறு காரணங்கள் விபத்துக்கு காரணமாக உள்ளன என்று அக்குழு மேற்கொண்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பட்டாசு ஆலைகள் கடந்த ஒரு வார காலமாக செயல்பட தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சாத்தூர் அருகே தாயில்பட்டி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் சூர்யா (25). இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகளை தயாரித்து வந்துள்ளார். வழக்கம்போல், இன்று (ஜூன் 21) காலை பட்டாசு தயாரிப்பின்போது, ஏற்பட்ட வெடி விபத்தில் சூர்யா வீடு உள்பட, அருகருகே இருந்த மூன்று வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின.

விபத்தில் சிக்கிய செல்வமணி (35), கற்பகம் (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வீட்டின் உரிமையாளர் சூர்யா (25), பிரபாகர், அன்னபாக்கியம் ஆகிய மூவரும் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த சாத்தூர், வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. விபத்து நடந்த இடத்தில் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share