தீபாவளி தொடர் விடுமுறை: மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Published On:

| By Balaji

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு அக்டோபர் 28ஆம் தேதியும் விடுமுறை அறிவித்துள்ளது.

வரும் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. தீபாவளியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். பலகாரம் செய்வது, புத்தாடைகள் வாங்குவது எனத் தீபாவளி பண்டிகை தற்போது முதலே களைகட்டத் தொடங்கியுள்ளது. வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு இரு நாட்கள் விடுமுறை போதாது என்று வருத்தம் தெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில், தீபாவளிக்கு மறு நாளான திங்கட்கிழமையும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு உள்ளூர் விடுமுறை என்று தமிழக அரசு மூன்று நாட்கள் விடுமுறையை அதிகாரபூர்வமாக நேற்று (அக்டோபர் 22) அறிவித்துள்ளது.

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பது உறுதியாகியுள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்ய நவம்பர் 9ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமையைப் பணி நாளாக அறிவித்துள்ளது.

இந்த விடுமுறை தனியாருக்குப் பொருந்துமா என்ற கேள்வி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் வழக்கு ஒன்றில் அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்குப் பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவர்களுக்குத் தீபாவளிக்கு முந்தைய மற்றும் பிந்தைய தினத்தில் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தத் தேர்வுகள் மாற்றுத் தேதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share