3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தவிர்க்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் இன்று (மார்ச் 11) காலை சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில், 18 தொகுதிகளுடன் மீதமுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், தேர்தல் நடத்த முன் வராவிட்டால் நீதிமன்றம் மூலம் இந்த மூன்று தொகுதிகளின் தேர்தலையும் நடத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில் 3 தொகுதிகளைத் தவிர்த்து 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தப்போகிறோம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு வழக்கைக் காரணமாக சொல்லியிருக்கிறார்கள். வழக்கு நடந்தால் தேர்தலை நடத்தக் கூடாது என்பது மரபல்ல. ஏனெனில் தேர்தலை நடத்தத் தடை உத்தரவு பிறப்பிக்காத நிலையில், 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நிறுத்திவைக்க வேண்டிய அவசியம் என்ன? இதில் உள்நோக்கம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையம் உள்நோக்கத்தோடு செயல்படக் கூடாது. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் எங்கள் எம்.பி.க்கள் முறையிடவுள்ளனர். நியாயம் கிடைக்கவில்லையெனில் உயர் நீதிமன்றத்தையோ தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தையோ நாட உள்ளோம்” என்று தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சிகள், திமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு, “எந்தத் தொகுதிகள் என்பது குறித்து காங்கிரஸ், விசிக தவிர்த்து மற்ற கட்சிகளுடன் பேசி முடித்து ஒப்பந்தம் கையெழுத்திட்டுவிட்டோம். ஆனாலும் மரபுப்படி அனைத்துக் கட்சிகளுடனும் பேசி முடித்த பிறகு தொகுதிகள் எவை என்பது வெளியிடப்படும். இன்று இரவோ அல்லது நாளைக்குள்ளோ வெளியிடுவோம். இன்னும் சில நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.�,”