17 ஆண்களுக்கு முன்னர் வெளியான நோக்கியா நிறுவனத்தின் 3310 மாடல் மீண்டும் வெளியாகவுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த 3210 என்ற ஒரு மாடலை மாற்றி, புதிய மாடலான 3310 என்ற ஒரு புதிய மாடலை வெளிப்படுத்தியது நோக்கியா நிறுவனம். அந்த காலக்கட்டத்தில் நம்பிக்கை வைத்து மக்கள் வாங்கிச் சென்ற ஒரு மொபைல் நோக்கியா என்றே கூறலாம். அதனால் நோக்கியா 3310 என்ற மாடல் வெளியானபோது சுமார் 126 மில்லியன் மொபைல் போன்கள் விற்பனையாகின. அதன்பின்னர், நோக்கியா நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தியதால் விற்பனையில் பெரும் சரிவைச் சந்தித்தது.
ஸ்மார்ட்போன்கள் அதிகம் வெளியானதால் பழைய மொபைல்களை பெரும்பாலும் மக்கள் தவிர்த்து வருகின்றனர் எனத் தெரிந்ததால், ஸ்மார்ட்போன் உற்பத்தியை கடந்த ஆண்டு தொடங்கியது நோக்கியா நிறுவனம். அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் நோக்கியா 6 என்ற ஸ்மார்ட்போன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் முன்பதிவு சீனாவில் பெருமளவில் இருந்தது என்றும், அதனால் மற்ற நிறுவனங்களின் விற்பனை சரிவடைந்தது என்றும் தகவலை வெளியிட்டனர்.
என்னதான் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினாலும் தற்போது அதிகம் பேசும் நபர்கள் மற்றொரு பழைய மாடல் மொபைலை கையில் வைத்திருப்பதை பெரும்பாலும் பார்த்திருப்பீர்கள். அதிலும் பெரும்பாலும் நோக்கியா நிறுவனத்தின் மொபைல்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். காரணம், ஸ்மார்ட்போன்கள் பேட்டரி சக்தி குறைவு என்பதே. அந்த நம்பிக்கைமிக்க நோக்கியாவின் பழைய மாடல்களில் ஒன்றான 3310 என்ற மாடல் மீண்டும் வெளியாகவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. அதன் வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்பதுபற்றி அதன் வெளியீட்டின் பின்னர் தெரியவரும்.�,